தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் கோவை- அவிநாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ‘ரெம்டெசிவிர்' மருந்து விற்பனை, நேற்று (மே.8) முதல் தொடங்கியுள்ளது.
கரோனா தொற்றால் சென்னையில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், சிகிச்சைக்கு தேவைப்படும் ரெம்டெசிவிர் ஊசி மருந்து சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கோவையிலும் தொற்று பாதிப்பு அதிகமாகி வருவதால், சிகிச்சைக்கான மருந்துகளின் தேவையும் அதிகரித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் தட்டுப்பாடு உள்ளதால், மருந்தை தேடி அலையும் நிலைக்கு நோயாளிகளின் உறவினர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கோவை-அவிநாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுன்ட்டரில் நேற்றுமுதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் மருந்து விற்பனை கிடையாது.
இதுதொடர்பாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது:
100 எம்ஜி ரெம்டெசிவிர் (1 வயல்) மருந்து ரூ.1,568-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் 6 வயல்களை பெற்றுக்கொள்ளலாம். மருந்து வாங்க வேண்டுமெனில் கரோனா பரிசோதனை (ஆர்டி-பிசிஆர்) செய்துகொண்டதற்கான சான்று, சி.டி. ஸ்கேன் பரிசோதனை சான்று, மருத்துவரின் பரிந்துரை (அசல்), நோயாளியின் ஆதார் அட்டை அசல், நகல், மருந்து வாங்க வரும் நபரின் ஆதார் அட்டை அசல், நகல் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும். தற்போது ஒரு நாளைக்கு சராசரியாக 83 நோயாளிகளுக்கு வழங்கத் தேவையான மருந்தை (500 வயல்) அளித்துள்ளனர்.
கூடுதலாக அளித்தால் விநியோகமும் அதிகரிக்கப்படும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த விற்பனை மையம் செயல்படும். விற்பனை மையத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வரிசையில் நின்று மருந்து வாங்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.