பொள்ளாச்சி அருகே கள்ளிப்பட்டி ஊராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவர்களில் வண்ண ஓவியங்களை வரைந்து கொடுக்க ‘பட்டாம்பூச்சி’ தன்னார்வ அமைப்பினர் முன்வந்தனர். கடந்த 2 நாட்களாக இப்பள்ளியில் தங்கிய தன்னார்வ அமைப்பினர், வகுப்பறைகளின் வெளிச்சுவற்றில் மாணவர்களுக்கு பிடித்த கார்ட்டூன் பொம்மைகளின் ஓவியங்களையும், வெளிப்புற சுற்றுச்சுவரில் மழைநீர் சேமிப்பு, காற்று மாசுபடுவதை தடுத்தல், மின் சேமிப்பு, பெண் கல்வி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட கல்வி சார்ந்த விழிப்புணர்வு ஓவியங்களையும் வரைந்துள்ளனர்.
வகுப்பறையின் உட்புறச் சுவற்றில் தமிழ், ஆங்கில மாதங்களின் எழுத்து வடிவம், சாலைப் பாதுகாப்பு குறியீடு, மனித உடல் உறுப்புகளான இருதயம், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் சூரிய குடும்பங்கள் குறித்து ஓவியம் வரைந்துள்ளனர். கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் கரோனா கால விடுமுறையை பயன்படுத்தி, இதுவரை 40-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் ஓவியங்கள் வரைந்துள்ளோம். கரோனா விடுமுறை காலம் முடிந்து பள்ளிக்கு திரும்பும் மாணவர்கள், இந்த ஓவியங்களை பார்க்கும்போது, அவர்களின் மனம் உற்சாகம் அடையும் என தன்னார்வ அமைப்பினர் தெரிவித்தனர்.