Regional01

தமிழகத்தில் எந்த தொகுதியிலும்மறு எண்ணிக்கைக்கு கோரிக்கை வரவில்லை : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் எந்த தொகுதியிலும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கான கோரிக்கை வரவில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியதாவது:

இன்று ( நேற்று) காலை வரை அனைத்து தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மாலைக்குள் அனைத்து முடிவுகளும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் சதவீதம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உரிய படிவங்களில் அந்த கட்சிகளின் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட பின்னர் வெளியிடப்படும்.

தேர்தல் முடிவுகள் தொடர்பான விவரங்கள் அனைத்தும் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் ஆணையம் சான்று அளிக்கும். அந்த சான்று ஆளுநரிடம் அளிக்கப்படும். மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று எந்த தொகுதியிலும் கோரிக்கைகள் வரவில்லை.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தல்கள் கடந்த பிப்.26-ம் தேதி அறிவிக்கப்பட்டது. தற்போது தேர்தல் வாக்கு எண்ணிககை முடிந்து, வெற்றி நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் 5 மாநிலங்களிலும் முடிவுக்கு வருவதாகவும், இது தொடர்பாக உடனடியாக அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறிவிப்பை வெளியிடும்படியும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மின்னணு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் உள்ளிட்டவை 45 நாட்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். தேர்தல் தொடர்பான அனைத்துவிதமாக பணிகளும் மே.4-ம் தேதிக்குள் (இன்று) முடிக்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT