கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக பூ மார்க்கெட் முற்றிலுமாக சாஸ்திரி மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 24-வது வார்டு பூ மார்க்கெட்டில் 135 மேடை கடைகள், 28 நிரந்தரக் கடைகளில் பூ வியாபாரம் நடைபெற்று வருகிறது. இவ்வளாகத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க, கடந்த 3 தினங்களுக்குமுன் 60 கடை வியாபாரிகளுக்கு, புதுப்பிக்கப்பட்ட பூ மார்க்கெட் வளாகத்தில் தற்காலிகமாக கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இருப்பினும் அவ்வளாகத்தினை பயன்படுத்தாமல், பழைய மார்க்கெட் வளாகத்திலேயே பூ விற்பனையில் ஈடுபட்டு, நெரிசலை உண்டாக்கி வந்தது ஆய்வில் தெரியவந்தது.
இதையடுத்து, கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தற்போது செயல்பட்டு வரும் பூ மார்க்கெட் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பூ மார்க்கெட் மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தற்காலிகமாக மூடப்படுகிறது. மேலும் மார்க்கெட்டில் உள்ள பூ வியாபாரிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றி பூ வியாபாரம் செய்வதற்கு ஏதுவாக மேற்கு ஆரோக்கியசாமி சாலையில் உள்ள சாஸ்திரி மைதானத்தில் பூ மார்க்கெட் தற்காலிகமாக செயல்படும். கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி சாஸ்திரி மைதான வளாகத்தை பொதுமக்களும், வியாபாரிகளும் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.