Regional01

காவல் நிலையங்களுக்கு வெளியே பந்தல் அமைத்து - மக்களிடம் புகார் மனுக்கள் பெற நடவடிக்கை : சென்னை காவல் ஆணையர் தகவல்

செய்திப்பிரிவு

முழு ஊரடங்கை முன்னிட்டு சென்னையில் நேற்று 7 ஆயிரம் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். திருமணம், இறப்பு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு செல்வோரிடம் உரிய ஆவணங்களை சரிபார்த்தபின் அவர்களை அனுமதித்தனர்.

அமைந்தகரை, அண்ணா வளைவு அருகில் உள்ள தற்காலிக வாகன சோதனைச் சாவடியில், சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று காலை ஆய்வு செய்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை பெருநகர காவல்துறையில், இதுவரை 3,609 போலீஸார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 3,338 போலீஸார் சிகிச்சை முடித்து நல்ல நிலையில் வீடு திரும்பியுள்ளனர். மீதம் உள்ளவர்கள் மருத்துவமனைகளிலும் சிலர் கரோனா பராமரிப்பு மையங்கள் மற்றும் இல்லங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை முதல் அலை மற்றும் இரண்டாம் அலையை சேர்த்து சென்னை காவல்துறையில் 7 போலீஸார் மருத்துவ சிகிச்சையில் இருக்கும்போதும் 6 பேர் சிகிச்சை முடிந்து திரும்பிய பின்னரும் என மொத்தம் 13 போலீஸார் இறந்துள்ளனர்.

முதல் அலையில் இறந்த காவல் துறையினர் குடும்பங்களுக்கு அரசின் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் அலையில் உயிரிழந்த 4 போலீஸாரின் குடும்பத்தாருக்கு நிவாரணம் தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

கரோனா தொற்று பரவலை முன்னிட்டு, காவல் நிலையங்களின் வெளிப்புறங்களில் பந்தல் அமைத்து பொதுமக்களின் புகார்களை பெற்று விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து நுங்கம்பாக்கம் மற்றும் அண்ணா நகர் காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று அங்கு கரோனா வழிகாட்டுதல் நடைமுறைகளை பின்பற்றப்படுகின்றனவா எனவும் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் காவல் கூடுதல் ஆணையர் டி.செந்தில்குமார், இணை ஆணையர்கள் கே.எழிலரசன், எஸ்.ராஜேஸ்வரி, துணை ஆணையாளர்கள் ஜி.ஜவஹர், எம்.எம்.அசோக் குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT