கோவை மாவட்டத்தில் வேளாண் மைத் துறை கட்டுப்பாட்டின் கீழ் ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், வடவள்ளி, சுந்தராபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன.
ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தைக்கு தொண்டாமுத்தூர், மதுக்கரை, சர்க்கார் சாமக்குளம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறி, பழங்களை விற்கின்றனர். இங்கு, மொத்தம் 192 கடைகள் செயல்படுகின்றன.
இவைதவிர, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் 10 கடைகள் பிரத்யேகமாக ஒதுக்கப் பட்டுள்ளன.
இந்நிலையில், விவசாயிகள் சார்பாக அனுப்பப்படும் விற்பனை யாளர்களை உழவர் சந்தை நிர்வாகம் வியாபாரம் செய்ய அனுமதிக்க மறுக்கிறது என்று கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை வளாகத்தை நேற்று முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் சு.பழனிசாமி தலைமை வகித்தார். பின்னர், அங்கிருந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, விவசாயிகள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர்.
இதுகுறித்து சங்க தலைவர் சு.பழனிசாமி கூறும்போது, ‘‘தோட்ட வேலைகளில் கவனம் செலுத்தும் விவசாயிகள், தங்கள் சார்பாக ஒரு விற்பனையாளரை உழவர் சந்தைக்கு அனுப்புவது வழக்கம்.
கால்நடை பராமரிப்பு, தண்ணீர்பாய்ச்சுவது, உழவு செய்வது என பல்வேறு பணிகள் உள்ளதால், விளை பொருட்களை விவசாயிகளே விற்பனைக்கு கொண்டுவருவது வேளாண் பணிகளைப் பாதிக்கும்.
எனவே, ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகள் சார்பாக அனுப்பப்படும் விற்பனையா ளர்களை அனுமதிக்க வேண்டும்" என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.