நகர்: காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள உஸ்ராம்பத்ரி கிராமத்தில் தீவிரவாதி ஒருவர் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீஸார், சிஆர்பிஎப் வீரர்கள் அடங்கிய பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை நேற்று முன்தினம் இரவு சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தீவிரவாதி பதுங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்ததும் அவரை சரணடைந்து விடுமாறு பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
ஆனால் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் அந்த தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி பெரோஸ் அகமது தார் என்பது தெரியவந்தது.
போலீஸார் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் மீது கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் இவருக்கு தொடர்பு இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, காஷ்மீரை சேர்ந்த ஏராளமான இளைஞர்களை தீவிரவாத இயக்கத்திலும் அவர் சேர்த்துள்ளதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.