மும்பை: மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே கடந்த பிப்ரவரி மாதம் வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்டிருந்த வழக்கை தவறாக கையாண்டதற்காக மும்பை காவல்துறை ஆணையராக இருந்த பரம்வீர் சிங் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதத்தில் அப்போதைய உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மாதந்தோறும் ரூ.100 கோடி வரை மாமூல் வசூலித்து தருமாறு தன்னை கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார். இப்புகார் தொடர்பாக சிபிஐ விசாரிக்க, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அனில் தேஷ்முக் பதவி விலகினார்.
இதையடுத்து மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் பரம்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில் பரம்வீர் சிங் தலைமறைவானார். இந்நிலையில் அவர் தலைமறைவு குற்றவாளியாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
1988-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான பரம்வீர் சிங் கடந்த 2020 பிப்ரவரியில் மும்பை காவல்துறை ஆணையராக பதவியேற்றார். 2021 மார்ச்சில் அவர் மகாராஷ்டிர ஊர்க்காவல் படை இயக்குநராக மாற்றப்பட்டார்.