போபால்: மத்திய பிரதேச மாநிலம் கட்னி பகுதியில் வசிப்பவர் ராம்ரத்தன் பாயல். இவர் பாஜக மாவட்ட தலைவராக இருக்கிறார். கடந்த புதன்கிழமை பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா பிரிவின் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ராம்ரத்தன் பாயலிடம் பத்திரிகையாளர்கள் கேள்விகள் எழுப்பினர்.
குறிப்பாக நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வாக இருப்பது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதை கேட்ட ராம்ரத்தன் பாயல் கோபமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் 3-வது அலை வரும் என்ற அச்சம் நிலவிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி கேட்கிறீர்கள். தலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.50தான். அங்கு பெட்ரோல், டீசல் நிரப்ப ஆள் இல்லை. குறைந்த விலைக்கு அவற்றை வாங்க வேண்டுமானால், ஆப்கானிஸ்தானுக்கு சென்று உங்கள் வாகனங்களில் பெட்ரோல், டீசல் நிரப்பிக் கொள்ளுங்கள். ஆப்கானிஸ்தானுக்கு நீங்கள் சென்றால்தான், இந்தியாவின் பெருமை உங்களுக்குப் புரியும்.
நீங்கள் எல்லோரும் பிரபலமான பத்திரிகையாளர்கள். தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையை நீங்கள் உணரவில்லையா? பிரதமர் மோடி எப்படி கரோனாவை கட்டுப்படுத்தி வருகிறார் என்ற உண்மையை அறிய மாட்டீர்களா? இவ்வாறு ராம்ரத்தன் பாயல் கூறினார்.
இந்த பதிலை கேட்டு பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அவர் பேசும் பேச்சுகள் அடங்கிய வீடியோ தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.