பெங்களூரு: கர்நாடகாவில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் முதல்வர் எடியூரப்பா நேற்று அமைச்சர்கள், அதிகாரிகள், நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் எடியூரப்பா கூறியதாவது:
மாநிலத்தில் ஊரடங்கை அமல்படுத்தியும் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் குறையவில்லை. எனவே், மே 10-ம் தேதி காலை காலை 6 மணி முதல் மே 24-ம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அனைத்துவிதமான கடைகள், உணவு விடுதிகள், மதுபான விடுதிகள், கேளிக்கை விடுதிகள், தனியார் அலுவலகங்கள் மூடப்படும். அத்தியாவசிய தேவைக்காக காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், மளிகை கடைகள் காலை 6 முதல் 10 மணி வரை மட்டுமே திறக்கப்படும். பால் கடைகள், மருந்தகங்கள், பரிசோதனை நிலையங்கள், மருத்துவமனைகள், ஊடக அலுவலகங்கள் உள்ளிட்டவை 24 மணி நேரமும் இயங்கலாம்.
வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகா வருவோர் கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் பெற்று வர தேவை இல்லை. இவ்வாறு முதல்வர் எடியூரப்பா கூறினார்.