ஜப்பான் பிரதமர் சுகா யோஷீஹிடே ஏப்ரல் இறுதியில் டெல்லி வருவதற்கு திட்டமிட்டிருந்தார். இந்தியாவில் கரோனா அதிவேக மாக பரவியதால் அந்த பயணம் தள்ளி வைக்கப்பட்டது.
இந்த பின்னணியில் இந்திய, ஜப்பான் பிரதமர்கள் நேற்று தொலைபேசியில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பிரதமர் மோடி கூறும்போது, "கரோனா வைரஸ் பிடியில் இருந்து இந்தியா விரைவில் மீண்டெழும்" என்று நம்பிக்கை தெரிவித்தார். "கரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்தியா வுக்கு தேவையான உதவிகளை வழங்குவோம்" என்று ஜப்பான் பிரதமர் சுகா உறுதி அளித்தார். சர்வதேச அரங்கில் கரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து போரிட இரு நாடுகளின் தலைவர்களும் அப்போது உறுதி பூண்டனர்.
இந்திய பெருங்கடல், பசிபிக் கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் குவாட் என்ற கூட்டமைப்பை உருவாக்கி செயல்படுகின்றன. சீனாவின் அத்துமீறல்கள் குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர்.
மேலும் சைபர் பாதுகாப்பு, டிஜிட்டல்மயம், 5ஜி சேவை, கரியமில வாயு வெளியேற்றத்தை குறைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர்.
ஜப்பானிய தொழில்நுட்ப உதவியுடன் மும்பை-அகமதா பாத் இடையே புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாகவும் இரு பிரதமர்களும் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
ஜப்பான் நாட்டில் தற்போது 4-வது கரோனா வைரஸ் அலை தொடங்கியுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்த நாட்டின் 4 மாகாணங்களில் அவசர நிலை அமல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் பரவும் மரபணு மாறிய கரோனா வைரஸ் ஜப்பானில் அண்மையில் கண்டறியப்பட்டது. இதுவரை 20 ஜப்பானியர்கள், இந்திய கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரிட்டிஷ் வகை கரோனா வைரஸும் ஜப்பானில் வேகமாகப் பரவி வருகிறது.
கரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணியை ஜப்பான் அரசு விரைவுபடுத்தியிருக்கிறது. இதற்கு சுகாதார பணியாளர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். எனவே பல் மருத்துவர்களுக்கு பயிற்சி அளித்து கரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.