உத்தரபிரதேசத்தில் புதிதாக 9 மருத்துவக் கல்லூரிகள் திறப்பு - ரூ.5 ஆயிரம் கோடியில் சுகாதார உள்கட்டமைப்பு திட்டம் : பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

உத்தரபிரதேசத்தில் ஒரேநேரத்தில் 9 மருத் துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். இதை யடுத்து ரூ. 5 ஆயிரம் கோடியில் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

உத்தரபிரதேசத்தில் சித்தார்த்நகர், எட்டா, ஹர்தோலி, பிரதாப்கர், பதேபூர், தியோரியா, காசிபூர், மிர்சாபூர், ஜான்பூர் ஆகிய மாவட்டங்களில் ரூ. 2,329 கோடியில் மருத்துவக் கல்லூரிகள் கட்டப் பட்டுள்ளன.

இவற்றில் 8 மருத்துவக் கல்லூரிகள், புதிய மருத்துவக் கல்லூரிகள் ஏற்படுத்து வதற்கான மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளன. ஜான்பூரில் மட்டும் மாநில அரசின் சொந்த நிதியின் கீழ் மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டுள்ளது.

மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 157 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இவற்றில் 63 மருத்துவக் கல்லூரிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

இந்நிலையில் சித்தார்த் நகரில் இருந்து 9 புதிய மருத்துவக் கல்லூரிகளை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார்.

இதையடுத்து பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.5,000 கோடி மதிப்பிலான பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தை அவர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பேசிய தாவது:

ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப் பட்டோர் பிற்படுத்தப்பட்டோர், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவரின் வலியையும் புரிந்துகொள்ளும் ஓர் அரசு இன்று மத்தியிலும் மாநிலத்திலும் உள்ளது. நாட்டில் சுகாதார வசதிகளை மேம்படுத்த நாங்கள் இரவு பகலாக உழைத்து வருகிறோம். இந்தியாவின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றான ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கமானது, சுகாதார உள்கட்டமைப்பில் உள்ள இடைவெளிகளை, குறிப்பாக நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள முக்கியப் பராமரிப்பு வசதிகள் மற்றும் முதன்மை பராமரிப்பு வசதிகளில் உள்ள இடைவெளிகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்டது.

முந்தைய அரசுகள் சுகாதாரத் துறையை புறக்கணித்தன. நாடு சுதந்திர அடைந்த 70 ஆண்டுகளில் எந்தக் கட்சியும் தேவைக்கு ஏற்ப சுகாதார உட்கட்டமைப்பை கட்டி யெழுப்பவில்லை. நாட்டில் நீண்ட காலம் ஆட்சி செய்த அரசுகள், நாட்டின் சுகாதார அமைப்பை மேம்படுத்துவதற்கு பதிலாக அதன் வசதிகளை சீர்குலைத்தன. எதிர்காலத்தில் எந்தவித தொற்று நோய் ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் வகையில் நமது சுகாதார அமைப்பை எனது அரசு கட்டமைத்து வருகிறது.

அடுத்த 10—12 ஆண்டுகளில் நாடு சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து வெளியேறிய மருத்துவர்களின் எண்ணிக்கையை விட அதிக மருத்துவர்களை நாடு பெறப்போகிறது.

மருத்துவக் கல்லூரி இடங்கள் அதிகரிப்பதால் ஏழைப் பெற்றோரின் குழந்தைகளும் மருத்துவராக வேண்டும் என கனவு கண்டு அதை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

நாட்டில் அதிக கவனம் செலுத்தப்படும் 10 மாநிலங்களில் உள்ள 17,778 கிராமப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் நிதியுதவி அளிக்கும். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் 11,024 நகர்ப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்களை ஏற்படுத்தும்.

இத்திட்டத்தின் கீழ் சுகாதாரத்துக்கான ஒரு தேசிய நிறுவனம், வைராலஜிக்கான 4 புதிய தேசிய நிறுவனங்கள், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்துக்கான ஒரு பிராந்திய ஆராய்ச்சி தளம், 9 உயிரிபாதுகாப்பு (நிலை-3) ஆய்வங்கங்கள், நோய் கட்டுப்பாட்டுக்காக 5 புதிய பிராந்திய தேசிய மையங்கள் ஆகியவையும் அமைக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்