FrontPg

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் குறித்து விசாரிக்கும் - ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் அவகாசம் நீட்டிப்பு : அடுத்த ஆண்டு பிப்.22-க்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர்ஆலைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதற்கிடையில், கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் மரணமடைந்தனர். பலர் காயமடைந்தனர்.

வன்முறை குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், முந்தைய பழனிசாமி தலைமையிலான அரசு, ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது. 2018 ஜூன் 4 அன்று விசாரணை ஆணையம் விசாரணையைத் தொடங்கியது. முதலில் விசாரணைக்காக அளிக்கப்பட்ட 3 மாத கால அவகாசம், பின்னர் 6 மாத காலமாக நீட்டிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்கள், பொதுமக்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் தலைவர் அருணா ஜெகதீசன், கடந்த மே 14 அன்று, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விசாரணையின் இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இந்த ஆணையத்தின் பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து, மேலும் 6 மாதங்களுக்கு, (2022-ம் ஆண்டு பிப்.22-ம் தேதி வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான குழு அடுத்தாண்டு பிப்.22ம் தேதிக்குள் இந்த சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆணையம் அமைக்கப்பட்டு 39 மாதங்கள் முடிவடைந்த நிலையில்,தற்போது 45 மாதங்களாக பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT