FrontPg

போட்டியின்றி தேர்வானார் - புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவராக பாஜக எம்எல்ஏ செல்வம் இன்று பதவியேற்பு :

செய்திப்பிரிவு

புதுச்சேரிசட்டப்பேரவைத் தலைவராக போட்டியின்றி தேர்வாகியுள்ள பாஜகஎம்எல்ஏ செல்வம் இன்று பதவியேற்கிறார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர்தேர்தல் இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி சார்பில் மணவெளி தொகுதி பாஜக எம்எல்ஏ செல்வம் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்காக முதல்வர் ரங்கசாமி, பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் நமச்சிவாயம் மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் முன்மொழிந்தும், வழிமொழிந்தும் 8 மனுக்களை தாக்கல் செய்தனர்.

நேற்று மதியம் 12 மணியுடன் வேட்புமனு தாக்கலுக்கான அவகாசம் முடிவடைந்தது. வேறு எம்எல்ஏக்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் பாஜகவை சேர்ந்த செல்வம்போட்டியின்றி பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை இன்று கூடும் சட்டப்பேரவையில் தற்காலிக பேரவைத் தலைவர் லட்சுமிநாராயணன் வெளியிடுகிறார். அதைத் தொடர்ந்து, பேரவைத் தலைவராக செல்வம் பதவியேற்கிறார்.

2001-ல் ரெட்டியார்பாளையம் தொகுதியில் இருந்து பாஜக சார்பில் வெற்றிபெற்று கிருஷ்ணமூர்த்தி, எம்எல்ஏவாக இருந்தார். அதன்பிறகு கடந்த20 ஆண்டுகளாக மக்களால் தேர்வு செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் இல்லை.

கடந்த சட்டப்பேரவையில் பாஜக வின் 3 நியமன எம்எல்ஏக்கள் இடம்பெற்றிருந்தனர். தற்போது நடந்த தேர்தலில், பாஜகவில் 6 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் மணவெளி தொகுதியில் வெற்றி பெற்ற செல்வம் பேரவைத் தலைவராகிறார். புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக பாஜகவை சேர்ந்தவர் பேரவைத் தலைவர் பொறுப்பை ஏற்கிறார்.

அமைச்சர்கள் பதவி பங்கீட்டில்என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையேஇழுபறி நீடித்தது. தொடர் பேச்சுக்கு பிறகு, பாஜகவுக்கு பேரவைத் தலைவர்,2 அமைச்சர்கள், என்ஆர்.காங்கிரஸுக்கு பேரவை துணைத் தலைவர் பதவி, 3 அமைச்சர்கள் என முடிவு செய்யப்பட்டது.

தங்கள் கட்சி மேலிடம் ஒப்புதல் அளித்துள்ள அமைச்சர்கள் பட்டியலைபாஜகவினர் முதல்வரிடம் அளித்துவிட்டனர். ஆனால், அத்துடன் தங்கள்கட்சிக்கான பட்டியலை சேர்த்து முழுமையான அமைச்சரவை பட்டியலை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் முதல்வர் ரங்கசாமி இன்னும் தரவில்லை.

அமைச்சர்கள் பதவியேற்பு எப்போது?

SCROLL FOR NEXT