செவில்லே: யூரோ கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றில் நடப்பு சாம்பியனான போர்ச்சுகலை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால்பதித்தது பெல்ஜியம் அணி. ஸ்பெயினின் செவில்லே நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 43-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் தாமஸ் மியூனியர் உதவியுடன் தோர்கன் ஹஸார்டு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணி 22 முறை இலக்கை நோக்கி பந்தை கொண்டு சென்ற போதிலும் கோல் அடிக்க இயலவில்லை. இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து - ஜெர்மனி அணிகளும், நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சுவீடன் - உக்ரைன் அணிகளும் மோதுகின்றன.
கொல்கத்தா: கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற இருந்த ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (யுஏஇ) மாற்றப்பட்டுள்ளது. இதை பிசிசிஐ தலைவர் கங்குலி நேற்று உறுதி செய்தார். போட்டியை நடத்தும் உரிமை பிசிசிஐ வசமே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் ஐசிசி, பிசிசிஐ-க்கு 4 வாரகாலங்கள் அவகாசம் கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேசிலியா: கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பிரேசில் - ஈக்வேடார் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. பிரேசில் தரப்பில் மிலிட்டோ 37-வது நிமிடத்திலும், ஈக்வேடார் தரப்பில் மேனா 53-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் பெரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெனிசுலாவை வீழ்த்தியது. பெரு அணி சார்பில் கரில்லோ 48-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.