சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஓய்வு காலத்துக்குரிய பணப்பலன்களை கொடுக்காமல், அரசு ஏற்கெனவே ரூ.8ஆயிரம் கோடி பாக்கி வைத்துள்ள நிலையில், தற்போது அரசு ஊழியர்களின் நிலையையும் அதேபோன்று ஆக்குவதற்காகத்தான் ஓய்வுபெறும் வயதை 60 என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு கடுமையாக பாதிக்கப்படும். தற்போதைய போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கும் தமிழக அரசுதான் காரணம்.
காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை திமுக, நடத்தி வருகிறது. அடுத்தக்கட்டமாக பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கெனவே இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது.
அதேபோல, வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்க திமுகவிடம் வலியுறுத்துவோம்.
டிடிவி.தினகரன் ஏற்கெனவே வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் வாங்கட்டும். பிறகு அவர் முதல்வராவது குறித்து பார்க்கலாம்.
சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதிமுகவில் வேண்டுமென்றால் கூடுதலாக குழப்பத்தை ஏற்படுத்தலாம். அதிமுகவுக்கும், சசிகலாவுக்கும் இடையே ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. அதனால், இருதரப்பும் இணைவது எளிதில் சாத்தியமல்ல.
தேர்தல் முடியும்வரை பிரதமர் மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வருவார். வடமாநிலங்களில் அவருக்கு செல்வாக்கு குறைந்துவிட்டதால், தென்மாநில மக்களை ஏமாற்றுவதற்காக வந்துகொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.