தொழில்நுட்பம்

பரிசு என்றால் தேவை கவனம்! | மாய வலை

ஒற்றன்

இணைய வழியில் பணம் பறிக்கும் சைபர் திருடர்களின் பழைய டெக்னிக் இது. உங்களுக்கு லாட்டரியில் இவ்வளவு பவுண்டு, டாலர் விழுந்திருக்கிறது என்று தொடர்பு எண்களோடு குறுந்தகவல் அனுப்பி, ஏமாற்றிப் பணத்தைக் கறப்பது, சைபர் திருட்டு அறிமுகமான காலத்தில் விரிக்கப்பட்ட வலை.

அந்த டெக்னிக்கை இப்போதும் பயன்படுத்தி சைபர் திருடர்கள் பணம் பறிக்கிறார்கள் என்பது, மக்கள் இன்னும் விழிப்புணர்வோ அல்லது எச்சரிக்கை உணர்வுடனோ இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மத்திய பிரதேசத்தில் ஒரு பெண் இந்த வலையில் சிக்கிய கதை இதை உணர்த்துகிறது.

பரிசு வலை: மத்திய பிரதேசத்தில் ஜபல்பூர் பகுதியில் சாரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சிறுசிறு வேலைகள் செய்யும் கணவர், இரண்டு குழந்தைகள் என எளிய வாழ்க்கை. கஷ்டமான சூழலில் குடும்பம் இருந்தாலும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் குடும்பத்தைச் சாரா நகர்த்திவந்தார்.

ஆனால், அவருடைய கைப்பேசிக்கு வந்த ஓர் அழைப்பு அவருடைய குடும்பத்தையே கடன்காரன் ஆக்கிவிட்டது. ஆம், சாராவுடன் பேசிய மர்ம நபர், ’உங்களுக்கு வைரம், தங்கம், 10 லட்சம் ரொக்கம் பரிசு லாட்டரியில் விழுந்துள்ளது’ என்று கூறியிருக்கிறார். ஆன்லைனில் உங்களுக்கு இப்படிப் பரிசு விழுந்திருக்கிறது என்று கூறி வலை விரித்திருக்கிறார்.

லாட்டரி எதுவும் வாங்காமல் எப்படிப் பரிசு விழும் என்றெல்லாம் சாரா யோசிக்கவில்லை. ஆன்லைன் என்று சொன்னதால், மர்ம நபர் சொன்னது உண்மை என்று நம்பியிருக்கிறார். அந்தப் பரிசைப் பெறக் கட்டணம் செலுத்தினால் போதும், பரிசுகள் உங்களுக்கு வந்துவிடும் என்றும் கட்டணம் செலுத்தாவிட்டால், வேறு நபருக்குப் பணம் மாறிவிடும் என்றும் மர்ம நபர் சொல்லியிருக்கிறார்.

இவ்வளவு சொன்ன பிறகும் சாராவுக்குச் சந்தேகம் வரவில்லை. ஏனெனில், இந்தப் பரிசு மூலம் குடும்பத்தின் நிலைமை மாறிவிடும் என்று மட்டுமே அவர் நினைத்திருக்கிறார். மர்ம நபரின் பேச்சை நம்பி நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் எனப் பலரிடமும் கடன் வாங்கி ரூ. 6 லட்சத்தை மர்ம நபருக்குச் சாரா கொடுத்திருக்கிறார். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம், ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று சாராவிடம் கூறிய மர்ம நபர், இதைப் பின்பற்றாவிட்டால் பரிசு ரத்தாகிவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஏமாறிய பெண்: அதனால் இதைப் பற்றி யாரிடமும் சொல்லாமல் அமைதியுடன் பரிசுக்காகக் காத்திருந்தார் சாரா. ஆனால், நாட்கள் போனதே தவிர, பரிசு வரவில்லை. மர்ம நபர் அழைத்த தொலைபேசி எண்ணுக்குச் சாரா அழைத்திருக்கிறார். ஆனால், அழைப்பு செல்லவே இல்லை. இதனால், செய்வதறியாது தவித்த சாராவுக்கு, பிறகுதான் ஏமாற்றப்பட்டுவிட்டோமோ என்று புலப்பட்டிருக்கிறது. மோசம் போய்விட்டோம் என்பதை உணர்ந்த சாராவால் ஜீரணிக்க முடியவில்லை.

கடன் கொடுத்தவர்கள் சும்மா இருப்பார்களா என்கிற பயமும் வந்திருக்கிறது. அடுத்த சில நாட்களில் அம்மா வீட்டுக்குச் சென்றுவருவதாகச் சொன்ன சாரா வீடு திரும்பவே இல்லை. பிறகு குடும்பத்தினர் சாரா காணாமல் போய்விட்டதாகக் காவல் துறையில் புகார் அளித்தனர். சாராவைத் தேடி போலீஸார் கண்டறிந்த பிறகுதான், மோசடி விவகாரமும் வெளியே தெரிந்திருக்கிறது.

வெளிநாட்டு ஐபி முகவரியிலிருந்து மர்ம நபர்கள் அழைத்து சாராவை ஏமாற்றியதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. சைபர் குற்றத் தடுப்புப் பிரிவினர் அந்த மோசடி நபர்களைப் பிடிக்க முயன்றுவருகின்றனர். ஆனால், இந்த வகையில் இழக்கும் பணத்தை கைப்பற்றுவது சவாலானது. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த சாராவுக்கு அது மிகவும் பெரியப் பணம். சைபர் குற்றத்தில் ஈடுபடுவோர் எந்தக் கருணையுமின்றி யாரை வேண்டுமானாலும் ஏமாற்றி, பணம் பறிக்கின்றனர்.

என்ன செய்ய வேண்டும்? - தொலைபேசி வழியாகவோ அல்லது குறுந்தகவல் வழியாகவோ அணுகி பரிசு விழுந்திருக்கிறது என்று யாராவது பேசினால், அது போலியானது என்பதை உணர வேண்டும். நாம் எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் எப்படிப் பரிசு விழும் என்று சிந்திக்க வேண்டும். அதுவும் நேரடியாக அணுக முடியாமல் தொலைபேசி வழியாக ஒரு நபர் அணுகும்போது, சம்பந்தப்பட்டவர் பணம் கொடுத்தால்தான் பரிசு கிடைக்கும் என்று சொன்னால், அவர் நிச்சயம் ஏமாற்றுப் பேர்வழி என்பதை புரிந்துகொண்டாக வேண்டும்.

இதுபோன்ற நபர்களிடம் நேரடியாகச் சந்திக்கலாம் என்று பேசினால், அதை ஒத்துக்கொள்ளாமல் டிசைன் டிசைன்களாகக் காரணங்களைச் சொல்வார்கள். அதிலிருந்தும் அந்த நபர் போலியானவர் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இப்படியான அழைப்புகளோ குறுந்தகவல்களோ வந்தால், முதலில் உஷாராகிவிட வேண்டும். தொடர்ந்து அழைப்புகள் வந்தால், உடனடியாக சைபர் குற்றத் தடுப்புப் பிரிவில் புகார் அளிக்க வேண்டும். இந்த வழியில் மோசடி செய்பவர்கள் மின்னஞ்சல் வழியாகவும் வருவார்கள் என்பதால், கவனமாக இருக்க வேண்டும்.

SCROLL FOR NEXT