தொழில்நுட்பம்

வருங்காலம் ‘பாஸ்கீஸ்’ காலம்!

ராகா

திறன்பேசியைத் திறக்கவும் சமூக ஊடகக் கணக்குகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தவும், டிஜிட்டலில் ஏதாவது ஒரு தளத்தில் உள்நுழையவும் பாஸ்வேர்டு பயன்படுத்த வேண்டியிருக்கும். எண்கள், எழுத்துகளால், ஸ்பெஷல் கேரக்டர்களாலான இந்த பாஸ்வேர்டுகளை ஓரங்கட்ட ‘பாஸ்கீஸ்’ (passkeys) வருகிறதாம்!

களவாடப்படும் பாஸ்வேர்டுகள்: அப்போது முதல் இப்போதுவரை பாஸ்வேர்டுகள் பரிணமித்து வந்துள்ளன. பூட்டி இருக்கும் ஏதாவது ஒரு விஷயத்தைக் கைப்பற்ற ‘திறந்திடு சீசேம்’ எனச் சொல்லும் மந்திரம் போன்றது பாஸ்வேர்ட். பிறந்தநாள் தொடங்கி திறன்பேசி எண்வரை பாஸ்வேர்டு அமைப்பதற்கெனச் சில எண்களையும் எழுத்து களையும் பயன்படுத்துவது வழக்கம். எவ்வளவு பழக்கப்பட்ட பாஸ்வேர்டாக இருந்தாலும் பயனர் அதை மறந்துவிடுவதும் அதை மீட்கப் போராடுவதும் வா(வே)டிக்கை!

ஆனால், எவ்வளவு பாதுகாப்பாக ஒரு பாஸ்வேர்டை வைத்திருந்தாலும் ஹேக்கர் களால் பாஸ்வேர்டுகள் களவாடப்படுவது டிஜிட்டல் யுகத்தில் தொடர்கதை ஆகிவிட்டது. இதனால், இத்தனை ஆண்டுகளாகப் புழக்கத்திலிருந்த பாஸ்வேர்டுகளுக்கு மாற்றாக ‘பாஸ்கீஸ்’ மாற இருப்பதாகக் கணினி துறையைச் சேர்ந்த நிபுணர்கள் கணிக்கின்றனர்.

அதென்ன பாஸ்கீஸ்? - பாஸ்வேர்டுகளைப் போல எண்களாலும் எழுத்துகளாலும் ஆனவை அல்ல, இந்த பாஸ்கீஸ். ‘கிரிப்டேகிராபிக் கீஸ்’ (cryptographic keys) முறையில் இந்த பாஸ்கீஸ் செயல்படும். உதாரணத்துக்கு ஏதாவது ஓர் இணையதளத்தில் உள்நுழைய முயற்சி செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். பாஸ்வேர்டு பயன்படுத்துபவராக இருந்தால், அந்தப் பாஸ்வேர்டைப் பதிவு செய்யும்போது இணையதளத்தில் உள்நுழைய, உங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

ஆனால், பாஸ்கீஸைப் பொறுத்தவரை, ‘பப்ளிக் கீ’ (public key), ‘பிரைவட் கீ’ (private key) என இரண்டு கீஸ் வழங்கப்படும். இதில் ஒன்று இணையதளத்திலும், மற்றொன்று உங்களுடைய திறன்பேசி அல்லது கணினியில் சேமிக்கப்படும். இணையதளத்தில் உள்நுழைய இந்த இரண்டு கீஸ்களும் இணைய (pair) வேண்டும்.

பாஸ்கீஸ் பற்றி முதலில் படிக்கும்போதோ பயன்படுத்தும்போதோ குழப்பமாக இருக்கலாம். ஆனால், பாஸ்வேர்டுகளைவிட பாஸ்கீஸ் பாதுகாப்பானவை எனவும் ஹேக்கர்களால் எளிதில் களவாட முடியாது எனவும் சைபர் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில், ‘பப்ளிக் கீ’ பொது சர்வர்களில் சேமிக்கப்பட்டாலும் ‘பிரைவட் கீ’ என்பதன் பயன்பாடு முழுக்க உங்கள் கையில்தான்.

சரி, பாஸ்வேர்டுகளைத்தான் பயன்படுத்தி வருகிறோமே, இப்போது பாஸ்கீஸின் தேவை என்ன என நீங்கள் கேட்கலாம். ஆனால், தொழில்நுட்ப ஜாம்பவான்களாக கூகுள், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் போன்ற பெருநிறுவனங்கள் ஏற்கெனவே பாஸ்வேர்டுகளுக்கு மாற்றாக, பாஸ்கீஸை அறிமுகப்படுத்தத் தொடங்கிவிட்டன.

எதிர்காலத்தில் பாஸ்கீஸின் பயன்பாடு பரவலாகும் வாய்ப்புகளே அதிகம். தற்போதைய நிலவரப்படி ஜிமெயில், ஆப்பிள் கிளவுட், மைக்ரோசாஃப்ட் அவுட்லுக், அமேசான், லிங்க்டுஇன் போன்ற தளங்களில் பாஸ்கீஸ் அமைக்க, பயனர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. பாஸ்வேர்டு அல்லது பாஸ்கீஸில் எது வேண்டுமோ பயனர் பயன்படுத்தலாம். ஆனால், எதிர்காலம் பாஸ்கீஸின் கையில்தான் என்பதை மறந்துவிடக் கூடாது!

SCROLL FOR NEXT