தொழில்நுட்பம்

கண்கதற வைத்த கடன் செயலி! | மாய வலை

ஒற்றன்

பெரும்பாலும் தெரியாமல் சைபர் குற்றங்களில் சிக்கிக்கொள்வதுதான் வழக்கம். ஆனால், தெரிந்தே சைபர் குற்றங்களில் சிக்கிக் கொள்பவர்களும் உண்டு. அந்த வகையில் போலியான கடன் செயலிகள் வழியே கடன் வாங்கி ஏமாற்றப்படுவோர் பெருகி வருகின்றனர். திருப்பதியைச் சேர்ந்த நவீன் (ஊர், பெயர் மாற்றப்பட்டுள்ளது) போலிக் கடன் செயலியில் கடன் வாங்கியதால் பட்ட அவஸ்தைகள் மற்றவர்களுக்கு ஒரு பாடம்.

பொதுவாக மிகவும் பணக் கஷ்டத்தில் இருப்பவர்களைக் கடன் வழங்கும் போலி செயலிகள் குறிவைத்து அவர்களைப் பகடையாக உருட்டி விளையாடுகின்றன. இவை ‘ஆன்லைன் லோன் ஆப்’ என்கிற பெயரில்தான் இயங்கிவருகின்றன. நவீனுக்கு அவசரமாக ரூ. 25 ஆயிரம் கடன் தேவைப்பட்ட நிலையில், பலரையும் கேட்டுப் பார்த்திருக்கிறார். எங்கும் பணம் கிடைக்காத நிலையில், நண்பர் ஒருவர் கொடுத்த யோசனைப்படி ஆன்லைன் கடன் செயலி வழியாகப் பணம் வாங்கும் முடிவை எடுத்திருக்கிறார்.

இதுபோன்ற நபர்களை ஈர்க்கும் வண்ணம் 'குறைந்த வட்டி, விரைவாகப் பணம்' உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கடன் செயலிகள் வெளியிடுகின்றன. அப்படி ஒரு விளம்பரம் நவீன் கண்ணில் பட்டது. அதை நம்பி அந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்த செயலியைத் தன்னுடைய திறன்பேசியில் பதிவிறக்கம் செய்தார்.

அந்தச் செயலியில் தன்னைப் பற்றிக் கேட்கப்பட்ட தகவல்களைப் பூர்த்தி செய்த நவீன், அந்தச் செயலி கேட்ட அனைத்துவிதமான அணுகல்களுக்கும் அனுமதி கொடுத்தார். அதாவது தொடர்புகள், குறுந்தகவல்கள், ஒளிப்படங்கள் எனக் கேட்ட எல்லா அணுகல்களுக்கும் நவீன் அனுமதி கொடுத்தார். எப்படியாவது பணம் கிடைத்தால் போதும் என்கிற மனநிலையில் இருந்த நவீன், இதுபோன்று அனுமதி கொடுப்பதன் பின்விளைவுகள் பற்றி அறிந்து வைத்திருக்கவில்லை.

பின்னர் அந்தச் செயலி வழியாக நவீன் கேட்டதில் பாதிப் பணம், அவருடைய கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், பணம் கொடுத்த ஒருசில வாரங்களில் அதிகப்படியான பணத்தைச் செலுத்துமாறு குறுந்தகவல்கள், வாட்ஸ்அப் தகவல்கள் நவீனுக்கு வரத் தொடங்கின. பிறகு போன் செய்து பணத்தைக் கொடுக்கும்படி நெருக்கத் தொடங்கினர். அடுத்தடுத்து தடித்த வார்த்தைகளில் திட்டிப் பணத்தைக் கேட்கத் தொடங்கினர். ஒரு நாள் காலை எழுந்து வாட்ஸ்அப்பைத் திறந்த நவீனுக்கு அதிர்ச்சி.

அவருடைய ஒளிப்படத்தைப் போட்டு, திட்டி வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்டு மன உளைச்சலுக்கு ஆளான நவீன், அடுத்த சில நாட்களில், வீட்டுப் பெண்கள் அணிந்திருந்த குண்டுமணி தங்கத்தையெல்லாம் வாங்கி அடமானம் வைத்து, கொடுத்த தொகைக்கு மேல் பணத்தைக் கட்டி, அந்தக் கடன் செயலியிலிருந்து வெளியேறினார்.

என்ன நடந்தது?: கடன் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும்போது சரிபார்ப்பு என்கிற பெயரில் அனைத்துக்கும் அனுமதி கொடுக்கும்போது கடன் வாங்கும் நபரின் அனைத்துத் தரவுகளும், கடன் செயலிக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிடும். அதைச் சாதகமாகப் பயன்படுத்தி, அவர்களும் கடன் வாங்கியவர்களை மிரட்டிப் பணம் பறிக்க முயற்சி செய்கிறார்கள்.

குறிப்பாகக் கடன் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டலும் நிராகரிக்கப்பட்டாலும் ஒரு சிறிய தொகையை அனுப்பி விடுவதும் உண்டு. பிறகு அந்தப் பணத்தைவிட அதிகமாகப் பணத்தைத் திருப்பிச் செலுத்துமாறு மோசடி நபர்கள் தொல்லை தருகின்றனர்.

ஒருவேளை பாதிக்கப்பட்டவர்கள் தொகையைச் செலுத்தத் தவறினால், திறன்பேசியில் உள்ள ஒளிப்படங்களைத் தவறுதலாகச் சித்தரித்து வாட்ஸ்அப்பில் அனுப்பி மிரட்டுவது, குடும்பத்தினர், உறவினர்கள் செல்போன் நம்பரைத் தொடர்புகொண்டு பேசி அசிங்கப்படுத்துவது என்று செய்வார்கள்.

இதற்குப் பயந்து அங்கிங்கு கடனை வாங்கி, அவர்கள் கேட்கும் பணத்தைக் கட்டிவிட்டு வெளியே வருவோர் உண்டு. கடன் செயலிகள் வழியே ஏமாறாமல் இருக்க, முறையான சரிபார்ப்பு எதுவும் இல்லாமல், எளிதான, உடனடிக் கடன்களுக்கு உறுதியளிக்கும் சலுகைகளை நம்பக் கூடாது. முறையாகச் சரிபார்க்கப்படாத கடன்கள் வழியாகவே பெரும்பாலும் மோசடிகள் நடைபெறுகின்றன.

மேலும் கேட்கப்படும் திறன்பேசி அணுகல்களுக்குக் கண்மூடித்தனமாக அனுமதி வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதன் மூலம் தரவுகளைத் திருடி, மிரட்டிப் பணம் பறிக்கின்றனர். குறிப்பாக, எந்த ஒரு கடன் செயலியையும் பதிவிறக்கம் செய்வதற்கு முன்பு அந்தச் செயலி இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் இதுபோன்ற கடன் செயலிகள் வழியாகச் சிக்க நேர்ந்தால், 1930 என்கிற சைபர் குற்றத் தடுப்புப் பிரிவில் புகார் செய்ய வேண்டும்.

(வெளியேற வழி காண்போம்)

SCROLL FOR NEXT