இன்றைய வாழ்க்கை முறையில் சமூக ஊடகங்களும் ஓர் அங்கமாகிவிட்டன. குறிப்பாக ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்கள் வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து வயதினராலும் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், ஃபேஸ்புக்கில் வலம்வரும் தேவையற்ற காணொளிகள் பயன்படுத்துவோருக்குக் கவனச்சிதறல், எரிச்சல், அசௌகரியம் போன்றவற்றை ஏற்படுத்தக் கூடும். இதனாலேயே ஃபேஸ்புக் பயன்பாட்டைக் குறைத்துகொள்வோரும் உண்டு.
இசூட் (ESUIT) - பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள், தொலை தூரத்தில் உள்ள நண்பர்கள், உறவினர்களுடன் தொடர்பு வைத்திருக்க, அவர்களுடன் உரையாட, விவாதங்கள் செய்ய, சுவாரசியங்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் ஃபேஸ்புக் தளம் இருந்தது. ஆனால், கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஃபேஸ்புக்கை ரீல்ஸ்கள் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டன.
கூடவே விளம்பரங்களும் அதிகரித்துவிட்டன. இதனால், ஃபேஸ்புக்கை இலகுவாகப் பயன்படுத்த முடியாத சூழல் பயனர்களுக்கு ஏற்பட்டிருப்பது என்னவோ உண்மைதான். மேலும், நமக்குத் தேவையானவற்றைப் பார்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் டேட்டா கார்டை கொண்டு, சம்பந்தம் இல்லாதவர்களின் ரீல்ஸ்களையும் விளம்பரங்களையும் பார்க்க வேண்டுமா என அலுத்துக்கொள்வோரும் உண்டு.
பயனர்களின் டைம்லைனில் விரும்பாததை எல்லாம் ஃபேஸ்புக்தளம் அனுமதிக்கிறது என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் இவற்றுக்குத் தீர்வாக ‘ESUIT’ என்கிற குரோம் நீட்டிப்புச் சேவையைப்பலரும் பரிந்துரையாக முன்வைக்கிறார்கள். அதாவது, ஃபேஸ்புக் பயன்பாட்டை ‘ESUIT’ எளிதாக்கியுள்ளது என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
‘ESUIT’ குரோம் நீட்டிப்பு சேவையைப் பயனர்கள் இணைத்துக்கொண்டால் தேவையில்லாத இடையூறுகள் இல்லாமல் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தலாம். குறிப்பாக, வணிக நோக்கத்துக்காக ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துபவர்களுக்கும், நிறுவனங்களுக்காகச் சமூக ஊடகங்களை நிர்வகிப்பவர்களுக்கும் ESUIT கூடுதல் வசதியாக இருக்கும்.
எவ்வாறு பயன்படுத்தலாம்: கூகுள் குரோமில் https://esuit.dev/ என்கிற தளத்தின் மூலம் ‘ESUIT’ குரோமைப் பயனர்கள் இணைத்துக்கொள்ள முடியும். பின்னர் அதில் உள்ள ‘செட்டிங்ஸ்’ பகுதிக்குச் சென்று பயனர்களுக்கு எவை வேண்டும், வேண்டாம் என்பதைத் தேர்வுசெய்து கொள்ளலாம். ‘ESUIT’ குரோம் நீட்டிப்புச் சேவை கூகுள் குரோமின் டெஸ்க்டாப் பதிப்புக்காக முதன்மையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனவே அது திறன்பேசிகளில், குறிப்பாக ஆன்ட்ராய்டு போன்களில் வேலை செய்யாது. திறன்பேசியில் பயன்படுத்த முடியாமல் இருப்பது, ‘ESUIT’ உருவாக்கத்துக்கு எதிர்மறையாகப் பார்க்கப்படுகிறது. என்றாலும் ‘ESUIT’க்கும் ஃபேஸ்புக்கிற்கும் நேரடித் தொடர்பு எதுவும் கிடையாது. தற்போதுவரை ஏராளமானோர் இந்தக் குரோம் நீடிப்புச் சேவையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
பிற வசதிகள்: ‘ESUIT’ பயனர்களுக்கு மேலும் சில வசதிகளும் கிடைக்கின்றன. தேவையான ஒளிப்படங்களையும் வீடியோக்களையும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். ‘ESUIT’இல் பயனர்களின் மின்னஞ்சல் முகவரி மட்டுமே சேகரிக்கப்படுகிறது. பிற தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப் படுவதில்லை. அது மட்டும்மல்ல, நம்முடைய டைம்லைனில் எந்த மாதிரியான பதிவுகள் வர வேண்டும் என்பதையும் தேர்வுசெய்து கொள்ளாலாம்.
இதன் மூலம் பயனர்கள் தங்கள் டைம்லைனில் வரும் ஆபாச வீடியோக்களைத் தவிர்க்க முடியும். ஃபேஸ்புக் மட்டும் அல்லாமல் இன்ஸ்ட கிராமிலும் ‘Esuit’ஐ இணைத்துகொண்டு பயன்படுத்தலாம்.