இன்றைய இணைய யுகத்தில் குற்றங்கள் பலவிதமாகப் பெருகிவிட்டன. அதில் ‘பாஸ் ஸ்கேம்’ (Boss Scam) என்பதும் ஒன்று. இந்த மோசடி பற்றித் தற்போது ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கக்கூடும். என்றாலும், இணையக் குற்றங்களில் இது இன்னமும் டிரெண்டிங்கில் உள்ளது. எனவே, இதைப் பற்றி அறிந்துகொள்வது அவரவர் பாக்கெட்டுக்கு நல்லது. இந்த மோசடியில் சிக்கியவர்கள் ஏராளம். அதில், கோவையைச் சேர்ந்த ராதாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒருவர்.
தனியார் நிறுவனம் ஒன்றில் ராதா பணியாற்றுகிறார். ஒரு நாள் அவருடைய வாட்ஸ்அப் எண்ணுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபர், ராதா பணியாற்றும் நிறுவனத்தின் பெயரைச் சொல்லி, அதன் உயரதிகாரி என்று சொல்லியிருக்கிறார். உடனடியாக ஒரு வணிக இணையதளத்தில் பரிசு கூப்பன் வாங்கி, அதன் விவரங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பும்படி சொல்லியிருக்கிறார்.
வாட்ஸ்அப்பில் அவருடைய அலுவலக உயரதிகாரியின் படம் இருந்ததால், அவரை நம்பிய ராதா, ரூ. 1 லட்சத்துக்கு இணைய பரிசு கூப்பன்களை ஆன்லைன் மூலமாக வாங்கி, உயரதிகாரி பேசிய வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பியிருக்கிறார். அதன்பின் அவரிடமிருந்து எந்தப் பதிலும் வராததால், சந்தேகம் அடைந்து அலுவலகத்தில் விசாரித்தபோதுதான், இது ‘பாஸ் ஸ்கேம்’ என்பது அவருக்குத் தெரியவந்தது.
அதென்ன பாஸ் ஸ்கேம்? - உடனடியாக சைபர் குற்றத் தடுப்புப் பிரிவில் அவர் புகார் அளித்ததன் மூலம், மோசடியால் களவாடப்பட்ட ரூ.1 லட்சத்தை பயன்படுத்த முடியாத அளவுக்கு போலீஸார் முடக்கிவிட்டனர். இதில் ராதா துரிதமாகச் செயல்பட்ட காரணத்தால், பரிசு கூப்பன் பணத்தை போலீஸார் முடக்கிவிட்டனர். ஆனால், இந்த ‘பாஸ் ஸ்கேமி’ல் ஏராளமானோர் பணத்தை இழந்திருக்கிறார்கள்.
‘பாஸ் ஸ்கேம்' என்பது அலுவலகத்தில் பணிபுரிவோருக்கு அவர்களின் உயர் அதிகாரிகளிடமிருந்து திறன்பேசி மூலம் அழைப்பு வரும். அதில் பேசும் உயரதிகாரி போன்ற மர்ம நபர், "ஆலோசனைக் கூட்டத்தில் இருக்கிறேன். அவசரமாக பரிசு கூப்பன் தேவைப்படுகிறது. குறிப்பிட்ட தொகைக்கு இந்த இணையத்தில் ஆன்லைன் கூப்பன்களை வாங்கி அனுப்புங்கள். பணத்தை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று பேசக்கூடும்.
ஒரு வேளை ஆன்லைன் கூப்பன் வாங்கத் தெரியவில்லை என்றால், குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்அப் மூலமாக லிங்க் அனுப்பி வாங்க வைக்கக்கூடும். இதில் அலுவலக உயரதிகாரி பயன்படுத்தும் எண் போலவே வாட்ஸ்அப்பில் பயன்படுத்தியும், அவருடைய ஒளிப்படத்தையும் வைத்துவிடுவதால் சம்பந்தப்பட்ட ஊழியருக்குச் சந்தேகம் வராமல் இருந்துவிடும்.
மேலும் உயரதிகாரி தோரணையில் அடுத்தடுத்து மர்ம நபர் பேசும்போது, அவருடைய உத்தரவை முதலில் நிறைவேற்ற வேண்டும் என்கிற பதற்றத்திலேயே பலரும் செயல்படுவார்கள். அதனால்தான் இந்த உத்தியைப் பின்பற்றி இணையத் திருடர்கள் திருடுகிறார்கள். அதனால்தான், இதை ‘பாஸ் ஸ்கேம்’ என்று அழைக்கிறார்கள்.
என்ன நடக்கிறது? - இந்த ‘பாஸ் ஸ்கேம்’ உத்தியில் அலுவலக உயரதிகாரிபோல் மட்டுமல்ல, காவல் அதிகாரி, அரசு அதிகாரிகள், உள்ளூர் அரசியல்வாதிகள்போல் பேசி, திருட்டை அரங்கேற்றுகிறார்கள். இது போன்ற இணைய மோசடியில் ஈடுபடுவோர் உயரதிகாரிகளின் விவரங்களை அரசு, அலுவலக இணையதளத்தில் பெற்றுவிடுகிறார்கள்.
வாட்ஸ் அப்பில் ஒளிப்படம் வைப்பதற்கு அவர்களுடைய சமூக ஊடகக் கணக்குகளுக்குச் சென்று அங்கிருந்து எடுத்துவிடுகிறார்கள். அதனால்தான், வாட்ஸ்அப்பில் ஒளிப்படத்தைப் பார்த்து பலரும் ஏமாந்துவிடுகிறார்கள். சைபர் குற்றங்கள் பெருகிவரும் நிலையில், இதைப் பற்றிய விழிப்புணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
நேரடியாக எண் மூலம் தொடர்கொள்ளாமல் வாட்ஸ்அப் மூலமாகத் தொடர்புகொண்டால் கவனமாக இருக்க வேண்டும். ஏதாவது காரணம் சொல்லி பரிசு கூப்பன்கள் அனுப்பச் சொன்னால், உஷாராகிவிட வேண்டும். குறுஞ்செய்தியோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ லிங்க் அனுப்பி பரிசு கூப்பன்கள் வாங்கச் சொன்னால், அதைச் செய்ய வேண்டாம். ஒளிப்படங்களை இணைய திருடர்கள் எடுக்காமல் இருக்க, சமூக வலைதள கணக்குகளைப் பூட்டி வைக்க வேண்டும்.
எங்கிருந்தோ ஓரிடத்தில் இருந்தபடி இதுபோன்ற இணைய திருட்டில் ஈடுபடுவோர் வசம் பரிசு கூப்பன்கள் வழியாகப் பணம் சென்றுவிட்டால், அதைக் கண்டுபிடித்து மீட்பது சைபர் குற்றப் பிரிவு போலீஸாருக்குச் சவாலான பணி. இழந்த பணம் பல நேரம் கிடைக்காமல் போய்விடக்கூடும். எனவே, கஷ்டப்பட்டு உழைத்து, சம்பாதிக்கும் பணத்தை இணைய திருடர்களிடம் இழக்காமல் இருக்க, நாம்தான் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
(வெளியேற வழி காண்போம்)