தொழில்நுட்பம்

டிஜிட்டல் டீடாக்ஸ்: மாத்தி யோசி!

செய்திப்பிரிவு

‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்கிற பழமொழி எக்காலத்துக்கும் பொருந்தும். ஆனால், ‘அளவுக்கு மிஞ்சித் திறன்பேசியைப் பயன்படுத்தினால் உடல்நலத்துக்கும் மனநலத்துக்கும் கேடு’ என்பது புதுமொழி ஆகிவிட்டது. திறன்பேசியைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது எனும் அளவுக்கு இன்று நிலைமை தலைகீழ். இந்தச் சூழலில் தெரிந்தோ தெரியாமலோ இணைய அடிமையாக இருப்பவர்களில் நீங்களும் ஒருவராகக்கூட இருக்கலாம்.

பிரச்சினைகள் என்ன? - டிஜிட்டல் கருவிகளை அதிகமாகப் பயன்படுத்தும் போது முதலில் பாதிக்கப் படுவது தூக்கம்தான். திறன்பேசி, மடிக்கனிணி, டேப்லெட், ஸ்மார்ட் வாட்ச் போன்று ஒன்றுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் சாதனங்களை ஒருவர் பயன்படுத்துவது இன்று சாதாரண மாகிவிட்டது. தூக்கமின்மை என்பது மன அழுத்தம், கவனச் சிதறல் போன்ற தீவிர பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லும் வாய்ப்புகள் உண்டு. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நமக்கு நாமே எடுப்பது நல்லது.

‘டீடாக்ஸ்’ செய்யலாம்: பொதுவாக ‘டீடாக்ஸ்’ என்றால் ‘நச்சு நீக்கம்’ எனப் பொருள். உடலில் சேரும் நச்சுக்களை சில உணவு முறைகள் மூலம் நீக்க முடியும், அதை ‘டீடாக்ஸிஃபிகேஷன்’ என்கின்றனர். அதைப் போலவே திறன்பேசி, கணினி ஆகியவற்றின் அதீதப் பயன்பாட்டால் உடல்நலத்துக்கும் மனநலத்துக்கும் ஏற்படக்கூடிய சிக்கல்களை, முறையான பழக்கவழக்கங்கள் மூலம் சரிசெய்ய முயற்சிப்பதுதான் ‘டிஜிட்டல் டீடாக்ஸ்’. சிலர் தேவைக்கு ஏற்ப திறன்பேசியைப் பயன்படுத் தலாம்.

சிலர் அதைவிட அதிகமாகவும், இன்னும் சிலர் அதற்கு அடிமையாகியும்கூட இருக்கலாம். குழந்தைகள் முதல் பெரியோர்வரை வயது வித்தியாசம் இல்லாமல் திறன்பேசிக்கு அடிமையாகின்றனர் என்கின்றன தரவுகள். இப்படி எந்த வகையில் திறன்பேசியைப் பயன்படுத்துவராக இருந்தாலும், எந்த வயதைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவ்வப்போது ‘டிஜிட்டல் டீடாக்ஸ்’ செய்வது நல்லது எனப் பரிந்துரைக்கின்றனர் மனநல நிபுணர்கள்.

செய்யக் கூடாதவை: டிஜிட்டல் டீடாக்ஸ் முறையைத் தொடங்கும்போது கண்டிப்பாகப் பின்பற்றக்கூடிய அளவிலான கட்டுப்பாடுகளை மட்டுமே முதலில் ஒருவர் விதித்துக்கொள்ள வேண்டும். நாள்தோறும் காலை நேரத்தில் 30 நிமிடங்கள் டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும், சாப்பிடும்போதும், தூங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பும் கண்டிப்பாகத் திறன்பேசியைப் பயன்படுத்தக் கூடாது, குடும்பத்தோடு, நண்பர்களோடு இருக்கும்போது திறன்பேசி, கணினியைப் பயன்படுத்தக் கூடாது என்பது போன்ற விதிமுறைகளைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யலாம். இது போன்ற விஷயங்களை முதலில் மாற்றி அமைக்கலாம்.

பெரும்பாலும் முக்கியத் தேவைகளுக்காக மட்டும் திறன்பேசியைப் பயன்படுத்தி, சமூக வலைதளப் பயன் பாட்டைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்யலாம். எந்நேரமும் யூடியூப், இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் மூழ்கிக்கிடக்காமல், இந்தச் செயலிகளைப் பயன்படுத்துவதற்கு எனக் குறிப்பிட்ட நேரத்தை மட்டும் ஒதுக்கி அதைப் பின்பற்றலாம். அடுத்ததாக நேரம் கிடைக்கும்போது திறன்பேசியைக் கையில் எடுக்காமல், அதற்கு மாற்றாக வேறு ஏதாவது ஒன்றைச் செய்யலாம்.

புத்தகம் வாசிப்பது, பாடல் பாடுவது, நடனம் ஆடுவது, ஓவியம் வரைவது போன்றவற்றைப் பின்பற்றலாம். இன்றைய காலக்கட்டத்தில் புத்தகம் வாசிக்கவும், பாடல் பாடுவதற்கும் திறன்பேசியைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம் என்பதால் வெறுமனே ‘ஸ்கிரால்’ செய்து நேரத்தை வீணாக்குவதற்குப் பதிலாக திறன்பேசியைக் கொண்டு ஆக்கபூர்வமாக வேறு விஷயங்களையும் செய்யலாம்! உங்களால் முடியும், ஆனால், அதற்கு நீங்கள் உறுதியாகத் தயாராக வேண்டும்.

– சரண்யா.ப பயிற்சி இதழாளர்

SCROLL FOR NEXT