தொழில்நுட்பம்

இன்ஸ்டகிராம் பழக்கம் மூலம் வந்த வில்லன்! | மாய வலை

ஒற்றன்

சைபர் குற்றங்கள் என்றாலே, பெரும் பாலும் எல்லாருமே இணையம் வழியாகப் பணம் திருட்டு, பொருளாதாரம் சார்ந்த குற்றங்கள் என்று மட்டுமே நினைக்கிறார்கள். ஆனால், இவற்றைவிட இணையக் குற்றங்களில் அதிகம் நடப்பது பாலியல் ரீதியிலான குற்றங்கள்தான்.

இந்த சமூக ஊடக யுகத்தில் எந்தப் பெண்ணையும் மெசஞ்சர் வழியாக அணுக முடியும் என்பதால், இதில் நடக்கும் குற்றங்களும் மிக அதிகம். ஆனால், இதில் பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் பெரும்பாலும் காவல் நிலையங்களை நாடுவது குறைவுதான். ஆனால், வேலூரில் சமூக ஊடகம் மூலம் பாதிப்பில் சிக்க நேர்ந்த ஓர் இளம் பெண், சரியான நேரத்தில் துணிச்சலுடன் செயல்பட்டதால், சிக்கலிலிருந்து தப்பினார். அவருடைய கதை மற்ற பெண்களுக்குப் பாடம்.

நல்லவராக நடிப்பு: ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட எந்த சமூக ஊடகத்தில் பெண்கள் கணக்கு வைத்தி ருந்தாலும், ஆன்லைன் சாட்டிங்கில் பெண்ணின் பெயர் தெரிந்தால் போதும், சபல ஆண்கள் வரிசைக் கட்டத் தொடங்கிவிடுவார்கள். முதலில் நல்லவர்போல அறிமுகம் செய்து கொண்டு, நலவிரும்பியாக அக்கறைக் காட்டத் தொடங்கி, கடைசியில் இம்சையில் தள்ளிவிடும் ஆண்கள் அதிகம். அப்படித்தான் இன்ஸ்டகிராமில் இளம் பெண்ணுக்கு அறிமுகமானார், சந்தோஷ் என்கிற இளைஞர். அந்த இளம் பெண்ணிடம் நல்லவரைப் போல நடித்து நட்புப் பாராட்டி வந்தார். அதை நம்பி திறன்பேசி எண்ணையும் அந்தப் பெண் பகிர்ந்துள்ளார்.

ஜென்டில்மேன் போலவே காட்டிக்கொண்ட சந்தோஷ், இன்ஸ்டகிராம் கணக்கில் அந்த இளம் பெண்ணின் ஒளிப்படம் இல்லையே என்று திறன்பேசியில் பேசும் போது அலுத்துக்கொண்டார். ஒளிப்படம் வழியாக உங்களைப் பார்க்க வேண்டும் என்று விருப்பத்தையும் வெளிப் படுத்தியிருக்கிறார்.

பல நாட்களாக பழகி வரும் மனிதர்தானே என்று நம்பிய இளம் பெண்ணும் அவருடைய ஒளிப்படங்கள் சிலவற்றை அவருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். பிறகுதான் சந்தோஷ் தன் வேலையைக் காட்டினார். அந்த ஒளிப்படங்களை ‘மார்பிங்’ மூலம் ஆபாசமாக மாற்றிய சந்தோஷ், அதை அந்த இளம்பெண்ணுக்கே பகிர்ந்துள்ளார். தன்னுடைய ஒளிப்படங்கள் ஆபாசமாக இருப்பதைப் பார்த்து அதிர்ந்துபோனார் அந்தப் பெண்.

அடுத்தடுத்து மிரட்டல்: இதையடுத்து, அந்தப் பெண்ணை தொடர்புகொண்டு இந்த ஒளிப்படங்களை ஆபாச இணையதளப் பக்கங்களில் பதிவேற்றம் செய்துவிடுவதாக மிரட்டியிருக்கிறார். அதோடு ஒரு முறை வீடியோ அழைப்பில் பேசும்படியும் வற்புறுத்தியிருக்கிறார். பயந்துபோன இளம்பெண் வீடியோ அழைப்பில் பேசியுள்ளார்.

அவருடைய பயத்தைப் புரிந்துகொண்ட சந்தோஷ், வீடியோ அழைப்பில் பேசும்போதே ஆபாசமாக நடந்துகொள்ளும்படி மிரட்டியிருக்கிறார். வேறு வழியின்றி அதையும் அந்த இளம்பெண் செய்திருக்கிறார். ஆனால், அதையும் ரெக்கார்டு செய்திருக்கிறார்.

பிறகு வீடியோ அழைப்பில் ரெக்கார்ட் செய்ததை அந்தப் பெண்ணுக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டியுள்ளார் சந்தோஷ். இனியும் பொறுத்தால் சிக்கலாகி விடும் என்பதை உணர்ந்த அந்த இளம் பெண், பெற்றோரிடம் நடந்ததைக் கூறி அழுதிருக்கிறார், இதையடுத்து போலீஸில் பெற்றோர் புகார் செய்தனர். களத்தில் இறங்கிய சைபர் குற்றப் பிரிவு போலீஸார், சந்தோஷ் உள்ள ஊரைக் கண்டுபிடித்து கொத்தாக அள்ளி வந்தனர். விசாரணை யில் சந்தோஷ் இதை ஒரு பிழைப்பாகவே வைத்தி ருப்பது தெரிய வந்தது.

என்ன செய்ய வேண்டும்? - ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட எந்தச் சமூக வலைதளங்களிலும் கணக்கு வைத்திருக்கும் பெண்கள், ஒளிப்படங்களைப் பகிர வேண்டாம் என்று பல ஆண்டுகளாகவே காவல் துறையினர் எச்சரித்துதான் வருகின்றனர். ஆனால், அவற்றைப் பெரிதாக யாரும் கண்டுகொள்வதில்லை. இதேபோல எந்த நட்புக் கோரிக்கை வந்தாலும் எண்ணிக்கைக்காக அவற்றை ஏற்கவும் செய்கின்றனர். பொதுவாக அறிமுகம் இல்லாத நபர்களுடன் எந்தப் பெண்ணும் பழகமாட்டார்.

ஆனால், சமூக வலைதளங்கள் மூலம் பழக நேரும்போது மட்டும் அதைப் பெண்கள் தளர்த்திவிடுவதுதான் சந்தோஷ் போன்ற நபர்களுக்கு வசதியாகிவிடுகிறது. அப்படிப் பழகும் நபருடன் திறன்பேசி எண்ணைப் பகிர்ந்தால் என்ன ஆகும்? இதுபோன்ற வில்லங்கம் வரத்தான் செய்யும். எனவே, சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாத கணக்குகளில் இருந்து வரும் நட்புக் கோரிக்கை, மெசேஜ்கள் எதையும் சீண்டாமல் இருப்பது நல்லது.

(வெளியேற வழி காண்போம்)

SCROLL FOR NEXT