குரல்வழி டைப்பிங் பிரபல மாகவும் எளிதாகவும் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இதற்கென பிரத்யேகச் சேவை களும் இருக்கின்றன. இப்போது, மைக்ரோசாப்டின் எழுது மென்பொருளான வேர்டிலும் குரல்வழி டைப்பிங் வசதி அறிமுகம் ஆகியுள்ளது. வேர்டு மென்பொருளின் இல்லத்தி லிருந்து, டிக்டேட் பட்டனை கிளிக் செய்து, எழுத நினைப்பதை பேசத் தொடங்கினால், திரையில் தானாக வாசகங்கள் டைப் ஆகிவிடுகின்றன.
நிறுத்தல் குறி போன்றவற்றையும் பேச்சிலேயே குறிப்பிடலாம். இவ்வளவு ஏன், எந்த இடத்தில் வார்த்தைகளைப் பெரிதாக்க வேண்டும் என்பது போன்ற ஃபார்மட் சார்ந்த கட்டளைகளையும் குரல் வழியே வழங்கலாம். வேர்டில் எழுதவும் பயன்படுத்தலாம். குறிப்புகளை எழுதி வைக்கவும் செய்யலாம். ஆங்கிலம், பிற மொழிகளில் பயன்படுத்தலாம். ஆனால், இதற்கு மைக்ரோசாப்ட் 365 சேவையை வைத்திருக்க வேண்டும்.
பாஸ்கோடிலும் தனித்தன்மை தேவை: திறன்பேசி தொடங்கி ஏடிஎம் இயந்திர சேவை வரை பல இடங்களில் நான்கு இலக்க பின் (PIN ) எண்களைப் பயன்படுத்தும் தேவை இருக்கிறது. இந்தத் தனிப்பட்ட அடையாள எண்கள் ரகசியமானவை. ஆனால், நடைமுறையில் பத்தில் ஒருவர் ஒரே பின் எண்ணை கொண்டிருப்பதாக ஆஸ்திரேலியாவின் ஏபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலானோர் பரவலாகப் பயன்படுத்தும் 1234, 1111 போன்ற பின் எண்களைப் பயன்படுத்துவதே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேக்கர்களால் களவாடப்படும் பாஸ்வேர்டுகள், பின் எண்களை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஹேவ் ஐ பீன் பான்டு (Have I Been Pwned?) இணையதள தரவுகள் அடிப்படையிலான ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. எனவே, உங்கள் பின் எண் சற்று தனித்தன்மையோடு இருப்பது சைபர் பாதுகாப்புக்கு நல்லது.
ஆப்பிளின் புதிய செயலி: ஐபோன்களுக்காக அறியப்படும் ஆப்பிள், இன்வைட்ஸ் (https://apps.apple.com/us/app/apple-invites/id6472498645) எனும் பெயரில் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்தச் செயலி மூலம் பயனாளிகள் தங்கள் நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்களை எளிதாக உருவாக்கி விருந்தினர்களை அழைக்கலாம். நாள்காட்டி ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இருக்கின்றன.
ஆப்பிளின் ஏஐ சேவையையும் வடிவமைப்பு, பின்னணிக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். இலவச சேவை என்றாலும், அழைப்பிதழ்களை உருவாக்கி அனுப்ப, ஐகிளவுட் சந்தா தேவை. இதற்கு மாற்றாக பார்ட்டிபுல், பேப்பர்லெஸ்போஸ்ட் போன்ற செயலிகளையும் முயன்று பார்க்கலாம்.
ஏஐ எழுதாத புத்தகம்: புத்தகங்களுக்கு ‘பெஸ்ட்செல்லர்’ போன்ற பட்டம் தேவைப்படலாமே தவிர எந்தவித சான்றிதழும் தேவையில்லை எனும் நிலை மாறியிருக்கிறது. ஜென் ஏஐ எனப்படும் ஆக்கத்திறன் ஏஐ நுட்பத்தின் வருகையால் ஏஐ துணை கொண்டு எழுதப்படும் செயற்கை ஆக்கங்கள் சந்தையில் நிறையத் தொடங்கப்பட்டுள்ளன. ஏஐ துணை கொண்டு எழுதப்படும் புத்தகங்களை உண்மையான புத்தகங்களிலிருந்து கண்டறிவது பெரும் சவாலாகி இருக்கிறது.
இந்நிலையில், எழுத்தாளர்களுக்கான ஆதர்ஸ் கில்ட் அமைப்பு, ஏஐ எழுதாத புத்தகங்களுக்கு, அதாவது உண்மையான எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களுக்கு மனித ஆக்கம் (https://authorsguild.org/human-authored/) எனும் சான்றிதழை வழங்கத் தொடங்கியுள்ளது. அமைப்பின் உறுப்பினர்களுக்கு இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழைப் பெற, ஆக்கத்தில் ஏஐ பயன்படுத்தப்படவில்லை என நிரூபிக்க வேண்டும். பிழை திருத்தம் போன்றவற்றுக்கு ஏஐ நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு விலக்கு உண்டு.
ஜப்பான் வாழ்க்கை முறை ரகசியம்: மிஸ்டர் போஸ்டர் எனும் ஆண்களுக்கான ஜப்பானிய இணையதளம் நடத்தி வரும் ‘தி ஜர்னல்’ எனும் டிஜிட்டல் இதழில், ஜப்பானிய முறையில் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள 33 வழிகள் எனும் கட்டுரை வெளியாகியுள்ளது. தலைநகர் டோக்கியோவின் அமைதியை ரசிக்கவும் (அங்கே ரயில்களில் யாரும் பேசுவதில்லை) எனத் தொடங்கும் இந்தக் கட்டுரையின் எல்லா குறிப்புகளுமே பின்பற்றத்தக்கவை.
என்றாலும், 11ஆவதாக வரும், பொது இடத்தில் செல்போன் அழைப்புகளுக்குப் பதில் சொல்ல வேண்டாம் எனும் குறிப்பு கவனிக்கத்தக்கது. பொதுஇடங்களில் செல்போன் அழைப்புகளுக்கு பதில் பேசாமல் இருப்பது மற்றவர்களுக்கு அளிக்கும் மரியாதை என்கிறது இந்தக் குறிப்பு. நாமும் பின்பற்றலாம்தானே! https://www.mrporter.com/en-us/journal/lifestyle/life-lessons-people-tokyo-japan-style-food-24538500
- enarasimhan@gmail.com