தொழில்நுட்பம்

லிங்க் மூலம் வந்த இணையத் திருடன்! | மாய வலை

ஒற்றன்

சமூக வலைத்தளங்களில் ஏதேனும் நிறுவனத்தின் பெயரில் பரிசு என்று போட்டிருந்தால் போதும். அங்கு சென்று, கேட்கப்படும் விவரங்களை எல்லாம் பூர்த்தி செய்து, எத்தனை பேருக்கு ஃபார்வேர்டு செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ, அத்தனை பேருக்கும் ஃபார்வேர்டு செய்துவிட்டு, பரிசுக்கான தகவலை எதிர்பார்ப்பதில் நம்மவர்களை அடித்துக்கொள்ளவே முடியாது! நம்ப முடியாத அளவுக்குப் பரிசு என்று அறிவித்தாலும்கூட, அதையும் உண்மை என்று நம்பி, கேட்கும் விவரங்களைத் தரும் அளவுக்கு வெகுளியாகவோ பேராசைக்காரர்களாகவோ இருப்பவர்கள் அநேகம்.

அப்படித்தான் இரண்டு மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டைச் சேர்ந்த கெளதமின் சமூக வலைதளப் பக்கத்தில் பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பெயரில் ஆஃபர் அறிவிக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த கெளதம், அது உண்மையென நம்பினார்.

ஆஃபரைப் பெறுவதற்காக அந்தப் பக்கத்தில் நுழைந்து, அதில் கேட்கப்படும் விவரங்களைப் பூர்த்தி செய்தார். தொடர்பு எண்ணையும் கொடுத்திருந்தார். சிறிது நேரத்தில் ‘வெரிஃபை’ என்கிற பெயரில் வாட்ஸ் அப் எண்ணுக்கு லிங்க் ஒன்று வந்தது. ‘வெரிஃபை’ செய்ய வேண்டும் என்று நினைத்து லிங்கை டச் செய்தார் கெளதம். ஆனால், அந்த லிங்கில் குறிப்பிடும்படி எதுவும் இல்லை.

ஒருசில மணித்துளிகளுக்குப் பிறகு அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூ.27 ஆயிரம் மாயமானது. எதுவும் புரியாமல் விழித்த கெளதம், யாருக்குப் பணம் சென்றது என்பது குறித்தும் தெரியாமல் தவித்தார்.

வங்கியைத் தொடர்புகொண்டு பேசிய பிறகே, தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள ஒரு வங்கிக் கணக்கிற்கு அந்தப் பணம் சென்றது தெரியவந்தது. வங்கியிலும் இது இணைய மோசடியாக இருக்கும் என்றும் சந்தேகம் தெரிவித்தனர். சைபர் குற்றத் தடுப்புப் பிரிவில் புகார் செய்த பிறகே, இது இணைய மோசடி என்பதை கெளதம் உணர்ந்துகொண்டார்.

என்ன நடந்தது? - பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பெயரில் இந்த மோசடி நடந்திருக்கிறது. 3 மாதங்களுக்கு ஆஃபர் கிடைக்கும் என்கிற ஆசையில் விவரங்களை கெளதம் பதிவு செய்ததன் மூலம், இந்த இணையத் திருட்டை அரங்கேற்றியிருக்கிறார்கள்.

வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பிய லிங்கை கெளதம் ‘டச்’ செய்தவுடனேயே திறன்பேசி ‘ஹேக்’ ஆகிவிட்டது. இணையத் திருடர்களின் கட்டுப்பாட்டில் திறன்பேசி சென்றதால், அதன்மூலம் ஓடிபி விவரங்களைப் பெற்று வங்கியிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளது.

அதனால்தான், சைபர் குற்றத் தடுப்புப் பிரிவினர் திறன்பேசி மெசேஜ், வாட்ஸ்அப், சாட்டிங் மூலம் வரும் எந்த இணைப்பு லிங்கையும் ஓபன் செய்யக் கூடாது என்று எச்சரிக்கிறார்கள். அப்படி அனுப்பப்படும் லிங்க் மூலம் திறன்பேசியை ஹேக் செய்யும் மோசடியை அரங்கேற்றி விடுகிறார்கள். இது பற்றி ஒன்றும் அறியாதவர்கள், தங்களிடமிருந்து பணம் திருடப்பட்டதுகூடத் தெரியாமலேயே இருப்பார்கள். அந்த அளவுக்கு இணையத் திருடர்கள் கச்சிதமாக வேலையை முடித்துவிடுவார்கள்.

இதுபோன்ற இணையத் திருட்டுகளிலிருந்து தப்பிக்க ஒரே வழி, மேற்சொன்ன வழிகளில் வரும் லிங்குகளைத் தப்பித் தவறியும் தொட்டுவிடக் கூடாது. அதைவிட முக்கியம், சம்பந்தம் இல்லாமல் சமூக வலைதளத்திலோ, இணையத்திலோ கேட்கப்படும் சுய விவரங்களைப் பதிவிடக் கூடாது. இதை உறுதியாகப் பின்பற்றினால், இதுபோன்ற இணையத் திருட்டுகளிலிருந்து தப்பிக்கலாம்.

(வெளியேற வழி காண்போம்)

SCROLL FOR NEXT