தொழில்நுட்பம்

ஏஐ-க்கு முந்தைய தேடல் | சைபர் வெளி

சைபர் சிம்மன்

இணையத்தில் செயற்கை உள்ளடக்கம் வெள்ளமென அதிகரிக்கத் தொடங்கியிருப்பதைக் கவனித்திருக்கலாம். அதாவது ஏஐ நுட்பத்தால் அல்லது ஏஐ நுட்பத்தின் துணைகொண்டு உருவாக்கப்படும் உள்ளடக்கம். இத்தகைய ஏஐ ஆக்கங்களே இணையத் தேடலிலும் முன்னிலை பெறத் தொடங்கியிருக்கின்றன.

ஏஐ ஆக்கங்கள் எல்லாமே பிழை செய்தி ரகங்கள் இல்லை என்றாலும், அவற்றின் ஒரே மாதிரித் தன்மையால் நிச்சயம் அலுப்பூட்டக்கூடியவை. இதனிடையே கூகுளும் ஏஐ அலையைச் சமாளிக்கும் வகையில், ஏஐ உருவாக்கும் தகவல் சுருக்கங்களை முன்னிறுத்தத் தொடங்கியிருக்கிறது.

இந்தச் செயற்கை அலையில் இருந்து தப்பிக்க விரும்புகிறவர்களுக்காக என்று ஓர் இணைய சேவை அறிமுகம் ஆகியிருக்கிறது. ’பிரி-ஏஐ சர்ச்’ எனும் பெயரில் கூகுள் குரோமிற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த நீட்டிப்பு சேவையைத் தரவிறக்கம் செய்து இயக்கினால், உங்கள் தேடல் முடிவுகளில் ஏஐ உருவாக்கம் அல்லாத உள்ளடக்கத்தை முன்னிறுத்துகிறது. - https://chromewebstore.google.com/detail/pre-ai-search-filter-goog/claajpcgaehlepegbiibddifpnlokckb

சமூக ஊடகக் காப்பீடு

சமூக ஊடக யுகம் உண்டாக்கியுள்ள புதிய போக்குகளில் ஒன்றாக ‘கேன்சல் கல்சர்’ எனப்படும் ரத்து கலாச்சாரம் அமைகிறது. இணையத்தில் ஒருவரின் செயல் அல்லது கருத்து பிடிக்கவில்லை எனில், அவரைப் புறக்கணித்து பாதிப்பை ஏற்படுத்தும் பயனாளிகள் தரப்பு செயலாக இது கருதப்படுகிறது. பிரபலங்களும், நட்சத்திரங்களும் இந்த ரத்து கலாச்சாரத்திற்குப் பெரும்பாலும் உள்ளாகின்றனர். ஒரு தவறான பதிவு அல்லது கருத்து ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தினால், அவர்களின் கூட்டுக் கோபம் பிரபலங்களைப் புறக்கணிக்க வைத்துப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இப்போது, ரத்து கலாச்சாரத்தில் இருந்து பிரபலங்களைப் பாதுகாப்பதற்காக என்றே பிரத்யேகக் காப்பீடு திட்டம் அறிமுகம் ஆகியிருக்கிறது. லண்டன் மக்கள் தொடர்பு நிறுவனமும், சாம்பயர் ரிஸ்க் எனும் காப்பீட்டு நிறுவனமும் இணைந்து இந்தக் காப்பீட்டை அறிமுகம் செய்துள்ளன. இந்தக் காப்பீடு, இணைய அலசல், கண்காணிப்பு அலசல் ஆகியவற்றைக் கொண்டு, ரத்து கலாச்சாரத்தில் சிக்காமல் இருப்பதற்கான ஆலோசனைகளைப் பிரபலங்களுக்கு முன்கூட்டியே வழங்குகிறது. அதையும் மீறி பாதிப்பு ஏற்படும்போது, எதிர்மறை தகவல்களைச் சமாளித்து மதிப்பை மீட்டெடுக்க உதவுகிறது.

இது சாட்ஜிபிடி ரகசியம்

சீனாவின் ‘டீப்சீக்’ ஏஐ செயலி ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் ஒரு பக்கம் இருக்க, சாட்பாட்களுக்கு மத்தியில் சாட்ஜிபிடியின் பயன்பாடு இன்னமும் உச்சத்தில்தான் இருக்கிறது. அதோடு ஏஐ செயலிகளுக்காகச் செலவிடப்படும் தொகையும் அதிகமாகவே இருக்கிறது. ஆப் பிகர்ஸ் எனும் நிறுவனத் தகவல்படி, ஏஐ செயலிகளின் வருவாய் 142 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இதில் மற்ற செயலிகளின் கூட்டு வருவாயைவிட சாட்ஜிபிடி வருவாய் அதிகம் எனத் தெரிகிறது. சாட்ஜிபிடி பயனாளிகள் தொடர்பாகவும் சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாட்ஜிபிடி பயனாளிகளில் 50 சதவீதம் பேருக்கு மேல் 25 வயதுக்கு உள்பட்டவர்கள் என்பதோடு, மொத்தப் பயனாளிகள் 85 சதவீதம் பேர் ஆண்கள் எனத் தெரியவந்துள்ளது. ஆண்களைவிட, பெண்கள் ஏஐ சேவையின் மீது குறைவான நம்பிக்கை வைத்துள்ளனர் எனச் சொல்லப்படுவதன் பின்னணியில் இந்தத் தகவலை அணுக வேண்டும். ஓர் ஆய்வின்படி, 53 சதவீதப் பெண்கள் தங்கள் பிள்ளைகள் ஏஐ சேவைகளைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர்.

டீப்சீக் வெற்றி ரகசியம் என்ன?

ஏஐ உலகில் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சீன செயலி டீப்சீக்கின் வெற்றிக்கான காரணங்கள் அலசி ஆராயப்பட்டு வரும் நிலையில், சாட்ஜிபிடியின் தாய் நிறுவனம் ஓபன் ஏஐ, தனது நுட்பத்தை நகலெடுத்து டீப்சீக் வெற்றி பெற்றுள்ளது என அதிரடியாகக் குற்றம்சாட்டியுள்ளது. ஓபன் ஏஐ முக்கிய நிர்வாகி ஒருவர் பைனான்சியல் டைம்ஸ் நாளிதழிடம் பேசியபோது, டீப்சீக், ‘வடிகட்டுதல்’ எனும் நுட்பத்தைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார். ஒரு மொழி மாதிரி இன்னொரு மொழி மாதிரியிடம் இருந்து கற்றுக்கொள்வது, வடிகட்டுதல் எனக் குறிப்பிடப்படுகிறது.

அதாவது, ஆசிரியரிடம் இருந்து கேள்விகள் கேட்டு கற்கும் மாணவர்போல, சாட்பாட்கள் இன்னொரு சாட்பாட்டிடம் லட்சக்கணக்கில் கேள்விகளைக் கேட்டு, அதன் அடிப்படையில் அந்த சாட்பாட்டின் செயல்பாட்டு முறையைக் கிரகித்துக்கொள்வதாகச் சொல்லப்படுகிறது. டீப்சீக்கும் இப்படித்தான் சாட் ஜிபிடிஐ வடிகட்டித் தனது பயிற்சிக்கான செலவைக் குறைத்திருக்கிறது என்பது சாட்ஜிபிடி தரப்பு குற்றச்சாட்டு. ஆனால், இதற்கு ஆதாரம் எதையும் அளிக்கவில்லை என்கிறார்கள்.

- enarasimhan@gmail.com

SCROLL FOR NEXT