சைபர் குற்றங்களில் புதிது புதிதாக மோசடிகளை இணையத் திருடர்கள் அரங்கேற்றிவருகிறார்கள். இந்தியாவில் யுபிஐ பணப் பரிவர்த்தனைகள் புரட்சியை உண்டாக்கி யிருக்கும் நிலையில், அதன் வழியாகவும் கைவரிசையைக் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள், இணையத் திருடர்கள். அந்த வழியில் பலரும் பணத்தை இழந்திருக்கிறார்கள். அதில் திருப்பூரைச் சேர்ந்த சந்தோஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் ஒருவர்.
சம்பளப் பணம் தன்னுடைய கணக்கில் கிரெடிட் ஆன பிறகு, ஏடிஎம்மில் சிறிது பணத்தைக்கூட எடுக்க மாட்டார் சந்தோஷ். யாருக்குப் பணம் தருவதாக இருந்தாலும், கடைகளுக்குச் சென்றாலும் யுபிஐ மூலமே பணத்தைச் செலுத்துவார். அவரைப் பொறுத்தவரை திறன்பேசியில் உள்ள யுபிஐ செயலிதான் சகலமும்.
ஒரு நாள் சந்தோஷின் யுபிஐ செயலிக்குத் திடீரென ரூ.3,000 கிரெடிட் ஆனது. அவருக்கு ஒன்றும் புரியவில்லை. இந்தத் தொகையை யார் அனுப்பியது, ஏன் அனுப்பியிருக்கிறார்கள் என்று குழம்பிப் போனார். அதே நேரத்தில் ரூ.3,000 அனுப்பியவர் அடுத்த சில நிமிடங்களில் ரூ.25 ஆயிரத்துக்குக் கோரிக்கை அனுப்புகிறார். திறன்பேசியில் நோட்டிபிகேஷன் வந்தவுடன், அதை சந்தோஷ் கிளிக் செய்தார்.
யுபிஐ செயலியைத் திறந்தவுடன், பணம் அனுப்பும்போது கடைசியில் பின் எண் டைப் செய்வோம் அல்லவா? நேரடியாக அதுதான் யுபிஐ செயலியில் தெரிந்தது. அவர் பதற்றத்தில் பின் எண்ணை டைப் செய்தவுடன், அவருடைய கணக்கிலிருந்து ரூ.25 ஆயிரம் வேறு எண்ணுக்குச் சென்றுவிட்டது.
சில நொடிகளில் ரூ.22 ஆயிரத்தை சந்தோஷ் இழந்தார். பின்னர் பயந்துபோய் தன் வங்கிக் கணக்கில் இருக்கும் எஞ்சிய பணத்தைத் தன் மனைவிக்கு மாற்றிவிட்டார். இது சைபர் திருடர்களின் கைவரிசை என்பதை உணர்ந்த சந்தோஷ், சைபர் குற்றத் தடுப்புப் பிரிவில் புகார் அளித்தார்.
என்ன நடக்கிறது? - இன்று ஜிபே, பேடிஎம் என யுபிஐ வழியாகப் பணப் பரிவர்த்தனைகள் அதிகம் நடைபெறுகின்றன. இதன் வழியாக ஏமாற்றத் திட்டமிடும் இணையத் திருடர்கள், முதலில் ஓர் எண்ணுக்குக் குறைந்த தொகையை யுபிஐ மூலம் டிரான்ஸ்ஃபர் செய்வார்கள். இத்தொகையைப் பெறும் நபர், இந்தப் பணப் பரிவர்த்தனை குறித்து குழப்பத்தில் இருப்பார். அதேநேரத்தில் அந்த நபருக்கு யுபிஐ செயலியில் பெரிய தொகைக்கான கோரிக்கை ஒன்று வரும்.
அப்போது பதற்றத்தில் ‘நமக்கு இந்தத் தொகை வரவில்லையே...’ என்று அந்த நபர், வங்கி இருப்பில் உள்ள பேலன்ஸை செக் செய்ய முயல்வார். அவர் பின் எண்ணை டைப் செய்தவுடன், இணையத் திருடர் கொடுத்த பணக் கோரிக்கையை ஓகே ஆகிவிடும். அவ்வளவுதான், வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் அம்பேல். இதற்கு ‘ஜம்ப்டு டெபாசிட் ஸ்கேம்' என்று பெயர்.
பெரும்பாலும் வங்கிக் கணக்கு இருப்பைச் சரிபார்ப்பதாக தவறாகக் கருதி, யுபிஐ பின் எண்ணை பயனர்கள் அவசர அவசரமாகள்ளிடும்போதுதான் இணையத் திருடர்களின் கோரிக்கைகளை அங்கீகரிக்கும்படியாகி மோசடி நடக்கிறது. உங்களுக்கு ஒரு தொகை வருவதுபோல நோட்டிபிகேஷன் வந்தால், அதைப் பார்க்க பின் எண் தேவையில்லை.
பரிவர்த்தனை செய்வதற்குதான் பின் எண் இட வேண்டும் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், இணையத் திருடர்கள் அவசரத்தையும் பதற்றத்தையும் உருவாக்குவதன் மூலமும், பயத்தில் என்ன செய்கிறோம் என்பதையே மறந்துபோகும் அளவுக்கு ஆளாக்கி பாதிக்கப்பட்டவர்களை திசைதிருப்புகிறார்கள். அதன்மூலம் பணத்தைத் திருடிவிடுகிறார்கள்.
மேலும் யுபிஐ செயலியைத் திறந்தவுடன் பணப்பரி வர்த்தனைக்கான பின் எண்ணை உள்ளிடுவதுபோலத் தொடங்காது. அப்படி உங்கள் திறன்பேசியில் தோன்றினால், உடனே உஷாராகிவிட வேண்டும். பின் எண்ணை உள்ளிடாமல் செயலியிலிருந்து வெளியேறிவிட வேண்டும். சம்பந்தப்பட்ட இணையத் திருடர், உங்களைத் தொடர்புகொண்டு பணத்தைத் தவறாக அனுப்பிவிட்டதாகக் கூறி, மீண்டும் அந்தப் பணத்தை அனுப்பும்படி கோரினாலும் செவி சாய்க்கக் கூடாது. இதைப் பற்றி 1930 என்கிற சைபர் குற்றத் தடுப்புப் பிரிவுக்குப் புகார் அளிக்கலாம்.
முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து சிறிய தொகை வந்தால், அடுத்த ஒரு மணி நேரம் வரை யுபிஐ வழியாக, உங்கள் இருப்புப் பணம் எவ்வளவு என்று செக் செய்யாதீர்கள். ஒருவேளை தொகை வந்தவுடனே பின் எண் இட வேண்டிய நிலை ஏற்பட்டால் தவறான பின் எண்ணைப் பதிவிடுங்கள். அப்போது தானாகவே பணக் கோரிக்கை ரத்தாகிவிடும். புதிய புதிய திருட்டுகளை இணையத் திருடர்கள் அரங்கேற்றும் நிலையில், நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.
(வெளியேற வழி காண்போம்)