பெங்களூருவைச் சேர்ந்த பிரசன்னாவுக்கு திறன்பேசியில் மூழ்கிக் கிடக்கும் பழக்கம் உண்டு. ஒரு சிம் மட்டுமே வைத்திருந்த பிரசன்னா, வேறு ஒரு பிசினஸுக்காக இன்னொரு சிம் கார்டு வாங்கினார். அதைத் தன்னுடைய திறன்பேசியில் இரண்டாவது சிம் கார்டாகப் பொருத்தினார்.
பொதுவாகப் புதிய சிம் கார்டு வாங்கினால், உடனடியாக கனெக்ஷன் கிடைக்காது. சில மணி நேரத்துக்குப் பின்பே அது ஆக்டிவேட் ஆகும். அதன் பிறகுதான் அழைப்புகள் வரத் தொடங்கும். ஆனால், அன்று புதிய சிம் கார்டைப் பொருத்தி குறிப்பிட்ட சில மணி நேரத்திலேயே பிரசன்னாவுக்கு அழைப்பு வந்தது.
‘இது டெலிவரி சேவை’ என்று சொல்லிக்கொண்டு பேசத் தொடங்கிய நபர், டெலிவரி குறைபாடு ஏதேனும் இருக்கிறதா என்பது போன்ற கேள்விகளுக்குப் பிறகு, ஒரு குறியீட்டைச் சொல்லி, அதன் பிறகு திறன்பேசியின் எண்ணை டைப் செய்து அழைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
பிரசன்னாவுக்குப் பழைய எண்ணுக்குத்தான் அழைப்பு வந்தது. ஆனால், சிம் கார்டு வழங்கிய தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அழைப்பு அது என்று நம்பிய பிரசன்னா, பேசிய நபர் கூறியது போலவே செய்திருக்கிறார். பிறகு அந்த அழைப்பு துண்டிக்கப் பட்டுவிட்டது. ஆனால், அடுத்த நாள் பிரசன்னாவின் வங்கிக் கணக்கிலிருந்த ரூ.24 ஆயிரம் மாயமானது.
அதிர்ச்சி அடைந்த பிரசன்னா என்ன செய்வதென்று தெரியாமல் இரண்டு நாள்கள் கழித்து வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்து விவரங்களைச் சொன்னார். பிரசன்னாவே வேறு கணக்கிற்கு மாற்றியதுபோல இருப்பதாகக் கூறிய வங்கித் தரப்பு, இது இணையத் திருட்டாக இருக்கலாம் என்றும் கூறியது. அதன் பிறகு சைபர் குற்றத் தடுப்பு போலீசாரிடமும் பிரசன்னா புகார் அளித்தார். விசாரணையில் அது இணையத் திருட்டு என்பது உறுதியானது.
என்ன நடந்தது? - பிரசன்னாவிடம் பேசிய மர்ம நபர், ஒரு குறியீடு என்று சொன்னார் அல்லவா? அதை ‘USSD’ (USSD - Unstructured Supplementary Service Data) என்கிறார்கள். இதன்படி திறன்பேசியில் டைப் செய்வதன் மூலம், மோசடிக்காரர்கள் குறிப்பிட்ட அந்தத் திறன்பேசிக்கு வரும் அழைப்புகளை தங்களுடைய எண்ணுக்கு அவர்களால் மாற்றிவிட முடியும். அது மட்டுமல்ல, திறன்பேசிக்கு வரும் ஓடிபி மூலம் மோசடியை அரங்கேற்ற முடியும்.
சிம் ஸ்வாப் மோசடியைத் தடுக்கும் நிலையில், புதிய சிம் கார்டுகள் வழங்கப்படும்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உள்வரும், வெளிச்செல்லும் எஸ்எம்எஸ், அழைப்புகளுக்கு 24 மணிநேரத் தடையை டிராய் விதித்துள்ளது. ஆனால், இதையும் முறியடிக்கும் வகையில் இணையத் திருடர்கள் மொபைல் கால்கள் மூலம் அழைத்து கைவரிசையைக் காட்டுகிறார்கள்.
இதில், டெலிவரி முகவர்கள் அல்லது வேறு ஏதேனும் சேவை முகவர்கள் என்று கூறிக்கொண்டு ‘USSD’ குறியீட்டைத் தொடர்ந்து திறன்பேசி எண்ணை ‘டைப்’ செய்யச் சொல்லும் இணையத் திருடர்கள், கால் பட்டணை அழுத்தும்படி சொல்வார்கள். இதைச் செய்வதன் மூலம், பயனரின் திறன்பேசிக்கு வரும் எஸ்எம்எஸ், அழைப்புகள் ஆகியவற்றை இணையத் திருடர்கள் கொடுத்த எண் பெறும்படி செய்கின்றனர். அப்போது இத்திருடர்கள் வங்கிக் கணக்கிற்கும் தொடர்பைப் பெறுகின்றனர். இந்த வழியில்தான் பிரசன்னாவின் பணமும் திருடப்பட்டது.
என்ன செய்ய வேண்டும்? - இதுபோன்ற அழைப்புகளைப் பெறும்போது இணையத் திருடர்கள் மொபைல் எண்ணைப் பதிவிடச் சொன்னாலோ அல்லது அவர்களின் எண்ணைத் தொடர்ந்து *401* போன்ற எண்ணைக் கொடுத்து, டயல் பட்டனை அழுத்தச் சொன்னாலோ உஷாராகிவிட வேண்டும். இது ‘USSD’ குறியீடு அழைப்பு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் சைபர் திருடர்கள் கால் ஃபார்வேர்டு கொடுப்பதாகும். அதைத்தான் குறுக்குவழி வழியில் செய்கிறார்கள். எனவே, அழைப்பின் ஊடாக எந்த எண்ணையும் பதிவிட்டு டயல் செய்ய வேண்டாம்.
அழைப்பு பகிர்தலுக்கு ‘USSD’ குறியீடுகள் இருப்பது போலவே, அழைப்பு பகிர்தலைச் சரிபார்க்கவும் ‘USSD’ குறியீடுகள் உள்ளன. பயனர்கள் திறன்பேசியில் *#21# எனத் தட்டச்சு செய்வதன் மூலம் அழைப்பு பகிர்தலின் நிலையைச் சரிபார்க்கலாம். ஒரு வேளை இதுபோன்ற அழைப்பு பகிர்தலை அகற்ற, தங்கள் திறன்பேசியில் ##002# பயனர்கள் டயல் செய்யலாம். இதன் மூலம், அவர்களின் எண்ணுக்கு வரும் அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.கள் வேறு எங்கும் போகாது. இந்த இணைய யுகத்தில் நாம்தான் உஷாராக இருக்க வேண்டும்.
(வெளியேற வழி காண்போம்)