சாட்ஜிபிடியை எத்தனையோ விதங்களில் பயன்படுத்தலாம் எனும் நிலையில், இப்படியும் பயன்படுத்தலாம் என மேக் யூஸ் ஆஃப் இணையதளத்தில், புத்தகப் பரிந்துரைக்காக சாட்ஜிபிடியைப் பயன்படுத்துவது பற்றிய சுவாரசியமான கட்டுரை வெளியாகியுள்ளது.
புத்தகப் புழுக்களுக்கான வலைப்பின்னல் சேவையான குட்ரீட்ஸைவிட, சாட்ஜிபிடியிடம் புத்தகப் பரிந்துரை கேட்கும்போது பயனுள்ளதாக இருப்பதாக இந்தக் கட்டுரை தெரிவிக்கிறது. நமது விருப்பத்தையும் எதிர்பார்ப்பையும் சரியாகத் தெரிவித்தால், சாட்ஜிபிடி அளிக்கும் புத்தகப் பரிந்துரைப் பட்டியல் வியக்க வைக்கிறதாம். நீங்களும்கூட முயன்று பார்க்கலாம்.
கேப்ட்சாவின் புது வடிவம்: இணையத்தில் கேப்ட்சா (CAPTCHA ) சோதனையை அறியாதவர்கள் இருக்க முடியாது. இணைய சேவைகளுக்குள் நுழைய முற்படும்போது, நீங்கள் மனிதர்தான் என்பதை நிரூபிப்பதற்காக, கோணல் மாணல் எழுத்துகளைக் கண்டறிவது அல்லது ஒளிப்படத்தில் உள்ள குறிப்பிட்ட பொருளைக் கண்டறிவது என அறியும் கேப்ட்சா சோதனை பல நேரம் எரிச்சலூட்டலாம்.
இப்போது, வெர்சல் எனும் மென்பொருள் நிறுவன தலைமை அதிகாரி கில்லர்மோ ரவுச், டூம் எனும் சுட்டுத்தள்ளும் விளையாட்டு பாணியில் கேப்ட்சா சோதனையை உருவாக்கியிருக்கிறார். மூன்று ராட்சதர்களைச் சுட்டுத்தள்ளிவிட்டு இந்த கேப்ட்சா பூட்டை விடுவிக்க வேண்டும். ஏஐ துணை கொண்டு இதை வடிவமைத்திருக்கிறார்: https://doom-captcha.vercel.app/
கைப்பை மீது ரோபாட் பொம்மை: வீட்டு ரோபாட் சாதனங்களுக்கு ரூம்பா புகழ்பெற்றது என்றால், பொம்மை ரோபாட்களுக்கு ஜப்பானின் யுகாய் இஞ்சினியரிங் பெயர் பெற்றது. யுகாய், இப்போது கைப்பையோடு ஒட்டிக் கொள்ளக்கூடிய மென்பந்து பொம்மை ரோபாட்டை அறிமுகம் செய்துள்ளது. பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இந்தச் சின்ன பொம்மை ரோபாட் அருகில் மனிதர்கள் வரும்போது அவர்களை நோக்கி தலையைத் திருப்பிப் பார்க்கும் தன்மைகொண்டது.
பொது இடங்களில் சின்னகுழந்தைகள் அருகில் இருப்பவர்களை நோக்கி தலையைத் திருப்பிப் பார்ப்பது போலவே, இந்த ரோபாட்டும் செயல்படுகிறது. உண்மையில், குழந்தைகளின் இந்தப் பழக்கத்தை ஊக்கமாகக் கொண்டு, அதே உணர்வைப் பொதுவெளியில் அளிக்கும் நோக்கத்தோடு இந்த ரோபாட் பொம்மையை யுகாய் உருவாக்கியுள்ளது.
ஏற்கெனவே, வாயில் கையை வைத்தால் குழந்தைகள் கடிப்பதுபோல மென்மையாகக் கடிக்கும் ரோபாட் பொம்மையை யுகாய் அறிமுகம் செய்து பெரும் வரவேற்பைப் பெற்றது. அதற்கு முன்பு, சோபாவில் வீற்றிருக்கக்கூடிய தலையணை பாணி ரோபாட்டை அறிமுகம் செய்து கவனத்தை ஈர்த்தது.
இணைய குறிப்பேட்டில் புதிய வசதி: இணையத்தில் குறிப்பெடுக்க உதவும் கூகுள் கீப் சேவை போல மைக்ரோசாப்ட் சார்பில் ஸ்டிக்கி நோட்ஸ் (Microsoft Sticky Notes) குறிப்பேடு சேவை வழங்கப்படுகிறது. குறிப்பெடுத்தலை மேலும் மேம்படுத்தும் வகையில் ஸ்டிக்கி நோட்ஸ் சேவையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இணையத்திலிருந்து ஏதேனும் வாசகங்களை எடுத்து இந்தச் சேவையில் சேமித்து வைத்தால், தொடர்புடைய இணைய முகவரியும் தானாகச் சேமிக்கப்படுகிறது. எனவே, பின்னர் இந்த வாசகங்களை எங்கிருந்து எடுத்தோம் எனும் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை.
இது கேமிங் நாற்காலி: கேமிங் தேவைக்கு ஏற்ற லேப்டாப் உள்ளிட்ட கருவிகளைத் தயாரிப்பதற்காக அறியப்படும் ரேஸர் நிறுவனம், கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற நவீன நாற்காலியை உருவாக்கியுள்ளது. நேர்த்தியான வடிவமைப்பு கொண்ட இந்த நாற்காலியின் சிறப்பம்சம் என்னவெனில், பருவகாலத்துக்கு ஏற்ப குளிர்ச்சி அல்லது வெப்பத்தை அளிக்கக்கூடியதாக இருப்பதுதான்.
எனவே கேமர்கள் மணிக்கணக்கில் அமர்ந்து விளையாடும்போது இந்த நாற்காலி இதமளிக்கும். ஆனால், இந்த நாற்காலி இன்னமும் சந்தைக்கு வரவில்லை. முன்னோட்ட அடிப்படையில், சி.இ.எஸ். தொழில்நுட்ப சர்வதேச திருவிழாவில் இந்த நாற்காலி, புராஜெக்ட் ஏரியல்லே எனும் பெயரில் காட்சிப்படுத்தப்பட்டது. இத்தகைய முன்னோட்ட வடிவமைப்புகளை நிறுவனம் சந்தைக்குக் கொண்டுவரும் தன்மை கொண்டது என்பதால், கேமர்கள் மத்தியில் இந்த நாற்காலி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
- enarasimhan@gmail.com