“கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டுவதை நாங்கள் தடுத்து நிறுத்துவோம்” - அண்ணாமலை

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: “கர்நாடக அரசு மேகேதாட்டு அணையை கட்ட முயற்சித்தால், நாங்கள் தடுத்து நிறுத்துவோம். மேகேதாட்டு நோக்கி நடைபயணம் நடத்தவும் தயாராக இருக்கிறோம்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ''தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகள் வரும் என்பதால் முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை வரவேற்கிறோம். அதேநேரத்தில் முதல்வர் ஏற்கெனவே துபாய் சென்று வந்தார். அதனால் தமிழகத்துக்கு கிடைத்த தொழில் முதலீடுகள் கொடர்பாக இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை. விரைவில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே, இதனால் தமிழகத்துக்கு என்ன பயன் கிடைக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேகேதாட்டு அணை: கர்நாடகா தேர்தலில் பாஜக சார்பில் நான் இணை தேர்தல் பொறுப்பாளராக சென்றபோது, பத்திரிகையாளர் சந்திப்பில் மேகேதாட்டு அணை கட்டக் கூடாது என்று கூறினேன். ஆனால், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மேகேதாட்டு அணை கட்டப்படும் என கூறியிருந்தது. தற்போது மேகேதாட்டு அணையை கட்ட வேண்டும் என்று கர்நாடக துணை முதல்வரும், நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமல் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் வழிபாடு செய்தார்.

இது தொடர்பாக தமிழக முதல்வரிடம் இருந்தோ, தமிழக காங்கிரஸ் கட்சியிடம் இருந்தோ எந்த கருத்தும், கண்டனமும் வரவில்லை. முல்லை பெரியாரிலும் இதே பிரச்சினை தான் நடைபெற்றது. தமிழகத்தின் உரிமைகளை முதல்வர் தொடர்ந்து விட்டுக் கொடுத்து வருகிறார். அவர்களால் முடியவில்லை என்றால், மேகேதாட்டு அணை கட்டுவதை நாங்கள் தடுத்து நிறுத்துவோம். அதற்கான திறமை எங்களிடம் உள்ளது. இதற்காக மேகேதாட்டு நோக்கி தமிழக பாஜக சார்பில் நடைபயணம் கூட நடத்த தயாராக இருக்கிறோம்.

ஆளுநர் அழைத்துள்ள கூட்டத்தில் துணை வேந்தர்கள் கலந்து கொள்ளக் கூடாது என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். துணை வேந்தர்களை ஆளுநர்கள் சந்தித்து பேசுவது எப்போதும் நடைபெறும் நிகழ்வுதான். தற்போது அரசியல் செய்கிறார்கள். தமிழக அரசு எப்போது திருந்த போகிறது என்று தெரியவில்லை. இவர்களின் மனப்பான்மையால் தமிழில் 36 ஆயிரம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இதே மனப்பான்மையில் இருந்தால் அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்யும். பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். காலம் தான் பதில் சொல்லும்.

கட்சியில் பழைய பஞ்சாங்கத்தை வைத்து என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது. எல்லோரையும் அரவணைத்துச் செல்கிறேன். டெல்லிக்குச் சென்று பேசுங்கள். என்னை தூக்குங்கள். நான் எப்போதும் ஒரே மாதிரி தான் இருப்பேன். தலைவராக இல்லாவிட்டாலும் இப்படித்தான் பேசுவேன். நான் தொண்டர்களுக்காக இருக்கும் தலைவன். கட்சி வளர்ச்சி பெற வேண்டும், ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைக்கும் தலைவன்.

ஸ்டெர்லைட் ஆலை: தூத்துக்குடி, நெல்லை போன்ற தென் மாவட்டங்களில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி முதலீட்டை கொண்டுவர வேண்டும். தென்மாவட்டங்களில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் இந்தியாவுக்கு எவ்வளவு பெரிய பின்னடைவு என்பதை நாம் தற்போது பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அதனால் பாதிப்புகள் தொடங்கிவிட்டது. தாமிரம் ஏற்றுமதி செய்து வந்த நிலை மாறி தற்போது இறக்குமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளோம். தாமிரத்துக்காக சீனாவை நோக்கி கைட்டி நின்று கொண்டிருக்கிறோம். தூத்துக்குடியில் ஆக்கபூர்மான பணிகளை செய்யும் அமைச்சர்கள் இல்லை. தொழிற்சாலைகளுக்கு சலுகைகள் வழங்கி நிலைத்து இருக்க வைக்க வேண்டும்.

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்துக்கு வந்த தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலைக்கு பங்குத்தந்தை குமார் ராஜா பிரார்த்தனை செய்து ஆசீர் வழங்கினார்.

ஜூலை 9-ம் தேதி ஊழல் எதிர்ப்பு நடைப்பயணம் தொடங்குகிறேன். இதனால் ஜூலை முதல் வாரத்தில் 2-வது ஊழல் பட்டியல் வெளியிடப்படும். திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு அரசு அதிகாரிகள் தாக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு திமுகவின் ஒன்றிய செயலாளர்கள் கையில் இருப்பது போன்று தான் உள்ளது. இந்த ஆட்சி வேண்டுமா என்று மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். திமுக ஓட்டைப்படகு என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. திமுக அமைச்சர்கள் அனைவரும் ஊழல்வாதிகள். அவர்களின் விவரங்கள் அனைத்தும் எனக்கு தெரியும். எத்தனை நாள் ஏமாற்ற முடியும். திமுக அமைச்சர்களுக்கு தைரியம் கிடையாது. காலம் அவர்களை அழிப்பது உறுதி. தற்போது அந்த வேலையை நாங்கள் எடுத்துள்ளோம். என் மீது பல மானநஷ்ட வழக்கு போட்டு உள்ளார்கள். தைரியம் இருந்தால் நீதிமன்றத்துக்கு வாருங்கள். திமுகவின் அழிவு தமிழக மண்ணில் கண்டிப்பாக நடக்கும்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.

மாதா கோயிலில் வழிபாடு: தொடர்ந்து பாஜக நிர்வாகிகளுடன் கட்சி வளர்ச்சி தொடர்பாக அண்ணாமலை ஆலோசனை நடத்தினர். நிகழ்ச்சியில் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி, மாநில துணைத்தலைவர் சசிகலாபுஷ்பா, தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்துக்கு சென்று வழிபட்டார். அவருக்கு பேராலய பங்குதந்தை குமார்ராஜா மாதாவின் திருவுருவப்படத்தை வழங்கி ஆசி வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

தமிழகம்

7 mins ago

தமிழகம்

35 mins ago

வாழ்வியல்

44 mins ago

தமிழகம்

38 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்