சிவகாசி: சிவகாசி அருகே ஊராம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
சிவகாசி அருகே பள்ளபட்டியைச் சேர்ந்தவர் கடற்கரை. இவர், ஊராம்பட்டியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். சங்கு சக்கரம், புஸ்வாணம் உள்ளிட்ட பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு 40-க்கும் மேற்பட்ட அறைகளில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று நண்பகல் 12 மணியளவில் மருந்து கலவை தயார் செய்யும் அறையில் மருந்தில் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை இடிந்து தரைமட்டமானது. அருகில் இருந்த மற்றொரு அறை சேதமடைந்தது. சிவகாசி தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த பத்தில் மம்சாபுரம் குமரேசன்(33), பள்ளபட்டி சுந்தர்ராஜ் (27) ஆகியோர் 100 சதவீதம் தீக்காயம் அடைத்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி ரிசர்வ் லைன் சிவன் காலனியை சேர்ந்த அய்யம்மாள் (70), இருளாயி (45) ஆகியோர் காயமடைந்தனர். 4 பேரும் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி குமரேசன், சுந்தர்ராஜ், அய்யம்மாள் ஆகியோர் உயிரிழந்தனர். இருளாயி சிகிச்சை பெற்று வருகிறார்.
பட்டாசு ஆலை உரிமையாளர் கடற்கரை, மேலாளர், ஃபோர்மேன் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் மாரனேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முதல்வர் ரூ.3 லட்சம் நிதி: இதற்கிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் மற்றும் சிகிச்சை பெறும் இருளாயிக்கு ரூ.50 ஆயிரம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.