தமிழகம்

பைக் மீது லோடு வேன் மோதியதால் தி.நகர் பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்டவர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

சென்னை: வியாசர்பாடியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (45). லோடு வேன் ஓட்டுநர். இவர் நேற்று முன்தினம் மாலை லோடு வேனில், சரக்கு ஏற்றிக் கொண்டு தியாகராய நகர் சென்றார். பின்னர், மாலை 5.30 மணியளவில் மாம்பலம் காவல் நிலையம் அருகே இருந்து உஸ்மான் சாலை மேம்பாலத்தில் ஏறி கோடம்பாக்கம் நோக்கிச் சென்றார்.

அப்போது, திடீரென வேன்கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதுடன், ஒரு கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்தியது.

இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த வெற்றிவேல் (58) என்பவர் மீதும் மோதியதில் அவர் உஸ்மான் சாலை மேம்பாலத்திலிருந்து தூக்கிவீசப்பட்டு கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனே அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.

வேன் ஓட்டுநர் விஜயகுமாரை கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில், தனக்கு திடீரென வலிப்புவந்ததால், வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக போலீஸாரிடம் விஜயகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT