விருத்தாசலம்: மாணவர் சேர்க்கை மூலம் பணியிட இருப்பை தக்க வைத்துக்கொள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
2022-23-ம் கல்வியாண்டு முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு ஊராட்சியிலும் இயங்கி வரும் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை ஒருங்கிணைத்து கிராமப்புறங்களில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான அரசின் நலத் திட்டங்கள் மற்றும் நன்மைகள் குறித்து ஆசிரியர்கள் வீதி வீதியாக சென்று பொது மக்களை சந்தித்து விளக்கிக் கூறுவதோடு, பொதுமக்களுக்கு அரசுப் பள்ளி செயல்பாடுகளின் விவரங்கள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களையும் விநியோகித்து வருகின்றனர்.
இதேபோல் தனியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின்றி பள்ளி வேனில் குழுவாக சென்று, ஆளுக்கு ஒரு வீதியை தேர்ந்தெடுத்து வீடு வீடாக சென்று தங்கள் பள்ளியின் கடந்த ஆண்டு சாதனை, பள்ளியில் உள்ள கட்டமைப்பு வசதிகள், ஸ்மார்ட் கிளாஸ், விளையாட்டு பயிற்சிகள் உள்ளிட்ட வசதிகளை எடுத்துக் கூறி, கட்டணத்தையும் தவணை முறையில் செலுத்த வசதி உள்ளது என்று கவர்ச்சிகரமாக பேசி, மாணவர்கள் சேர்க்கையில் ஈடுபடுகின்றனர்.
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளித் தாளாளர் சேர்க்கை இலக்கு நிர்ணயித்து, அந்த இலக்கை அடைந்தால் தான் அடுத்த ஆண்டு பணியில் தொடர முடியும் என்று கறாராக கூறுவதால் வேறு வழியின்றி அவர்கள் மாணவர் சேர்க்கையில் அதி தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதே நேரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் தத்தம் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தால் தான் அப்பள்ளி அதே இடத்தில் இயங்கும் எனவும், இல்லையெனில் அப்பள்ளி மூடப்பட்டு அருகிலுள்ள மற்றொரு பள்ளியோடு இணைக்கப்பட்டு, அப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பணியிட மாற்றமும், தலைமையாசிரியர் நிலையில் இருந்து ஆசிரியர் நிலைக்கு மாற வேண்டிய நிலை ஏற்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே வட்டாரக் கல்வி அலுவலகத்திற்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதால் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் மாணவர் சேர்க்கைக்கான போட்டியில் களமிறங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், “இது ஒரு ஆரோக்கியமான போட்டி தான் என்றாலும், மக்களிடையே அரசுப் பள்ளிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழ்வழியில் பயில்வதால் கிடைக் கும் சலுகைகள் குறித்தும் அறிந் துள்ளனர்” என்றார்.