மதுரை: திருமங்கலம் அருகே பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியதில் தென்காசியை சேர்ந்த பயணிகள் சிலர் காயமடைந்தனர்.
செங்கோட்டை- சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம் மாலை செங்கோட்டையில் இருந்து புறப்பட்டது. இரவு 10 மணியளவில் திருமங்கலம் அருகே மறவன்குளம் பகுதியை ரயில் கடந்தபோது, முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் தென்காசி மாவட்டம், கடையநல்லூரைச் சேர்ந்த கலா (28), தென்காசி அய்யாபுரம் மாரிச்செல்வி (35) ஆகியோர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து பதற்றமடைந்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். பணியில் இருந்த ரயில்வே போலீஸார் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு முதலுதவிக்கு பிறகு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் 30 நிமிடம் கழித்து ரயில் புறப்பட்டு சென்றது.
இதுகுறித்து ரயில்வே எஸ்பி செந்தில்குமார் உத்தரவின்பேரில், ரயில்வே போலீஸார் மற்றும் பாதுகாப்பு படையினர், மறவன்குளம் ரயில்வே கேட், திருமங்கலம் ரயில் நிலையம், கப்பலூர் டோல்கேட் பகுதியில் சோதனை நடத்தினர். அப்பகுதி சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.