தமிழகம்

சேலத்தில் 105.1 டிகிரி வெயில்: வெப்பம் சுட்டெரித்ததால் திணறிய மக்கள்

செய்திப்பிரிவு

சேலம்: சேலம் மாவட்டத்தில் கடந்த 10-ம் தேதி முதல் பகல் நேர அதிகபட்ச வெப்பம் தொடர்ந்து 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் கூடுதலாக பதிவாகி வரும் நிலையில், நேற்று 105.1 டிகிரி என வெயில் சுட்டெரித்ததால், மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகினர்.

கோடை காலம் தொடங்கியதில் இருந்தே, சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக, கடந்த 10-ம் தேதி தொடங்கி, நேற்று வரையிலும் பகல் நேர அதிகபட்ச வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறையாமல் இருந்து வருகிறது. கடந்த 13-ம் தேதி அதிகபட்சமாக 105.5 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவானது.

அடுத்த நாளும் இதே அளவு வெயிலின் தாக்கம் இருந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் பகல் நேர அதிகபட்ச வெப்பம் 103 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது. இந்நிலையில், சேலத்தில் நேற்று வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து, 105.1 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது. இதனால், வெயிலின் தாக்கத்தால் அனல் காற்று வீசியதால் சாலையில் நடமாடியவர்கள், வாகனங்களில் சென்றவர்கள் மிகவும் தவிப்படைந்தனர்.

குறிப்பாக, வெயிலில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்ல முடியாமல் பலரும் திணறினர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், வெயிலின் தாக்கத்தால் தலைவலி, தலைச்சுற்றல், உடல் சோர்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. சாலையில் செல்லும்போது, அனல் காற்றினை சமாளிக்க முடியாமல் சிரமப்படுகிறோம், என்றனர். வெயிலின் தாக்கத்தை சமாளிக்க, மக்கள் இளநீர், பதநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை தேடிச் சென்று சுவைக்கின்றனர்.

SCROLL FOR NEXT