திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் சரணடைய கட்சியினருடன் ஊர்வலமாகச் சென்ற மாநகர காங்கிரஸ் தலைவர் மணிகண்டன். 
தமிழகம்

சூரத் நீதிபதி குறித்து அவதூறு பேச்சு: திண்டுக்கல் காங். தலைவர் காவல் நிலையத்தில் சரண்

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: சூரத் நீதிமன்ற நீதிபதி குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் மாநகர காங்கிரஸ் தலைவர் மணிகண்டன், திண்டுக்கல் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீஸார் கைது செய்தனர்.

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததைக் கண்டித்தும், அவரின் எம்.பி. பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டதைக் கண்டித்தும் கடந்த 6-ம் தேதி திண்டுக்கல்லில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் பங்கேற்ற திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் தலைவர் மணிகண்டன், சூரத் நீதிமன்ற நீதிபதி குறித்து அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக மணிகண்டன் மீது பொது இடத்தில் அவதூறாகப் பேசுதல், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின்கீழ் திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தமிழக காங்கிரஸ் தலைமையும், இந்த புகார் தொடர்பாக மணிகண்டனுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று காலை, திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகேயுள்ள காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து காங்கிரஸ் கட்சியினருடன் ஊர்வலமாகப் புறப்பட்ட மணிகண்டன், திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டனை திண்டுக்கல் ஜே.எம் 2 நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் மீனாட்சி உத்தரவிட்டதையடுத்து மணிகண்டன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT