சென்னை - கோவை இடையேயான ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை - கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை விமான நிலைய புதிய முனையம் திறப்பு, சென்னை - கோவை ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவை தொடக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தார். முன்னதாக, தெலங்கானாவில் நடந்த புதிய திட்டங்கள் தொடக்க விழாவில் பங்கேற்ற அவர், ஹைதராபாத்தின் பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து விமானப் படை விமானம் மூலம் நேற்று மதியம் 2.44 மணிக்கு சென்னை வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் வரவேற்றனர். ‘தமிழகத்தில் காந்தியடிகளின் பயண அனுபவங்கள்’ என்ற புத்தகத்தை பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின், நினைவுப் பரிசாக வழங்கினார்.

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருவதால், அம்மாநில பொறுப்பாளராக உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த வரவேற்பு நிகழ்வில் பங்கேற்கவில்லை. பாஜக மூத்த நிர்வாகிகள் சிலர் பங்கேற்று, பிரதமரை வரவேற்றனர்.

பின்னர், சென்னை விமான நிலையத்தின் புதிய முனைய கட்டிடத்தை திறந்துவைத்து பார்வையிட்ட பிரதமர், மீண்டும் விமான நிலையம் வந்து, ஹெலிகாப்டர் மூலம் மாலை 3.40 மணிக்கு சென்னை நேப்பியர் பாலம்அருகே உள்ள ஐஎன்எஸ் அடையாறுகடற்படை தளத்துக்கு வந்தார். அங்கிருந்து கார் மூலம், சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சென்றார்.

சிவானந்தா சாலை, அண்ணா சாலை உட்பட வழிநெடுகிலும் சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஏராளமான பாஜகவினர், பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆங்காங்கே தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், செண்டை மேளம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பிரதமருக்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமரின் கார் மீது மலர்களை தூவியும் வரவேற்றனர். மகிழ்ச்சியுடன் கையசைத்து, அவர்களது வரவேற்பை ஏற்றபடி, பிரதமர் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தார்.

ரயில் நிலையத்தின் 10-வது நடைமேடையில் தயார்நிலையில் நிறுத்தப்பட்டிருந்த சென்னை - கோவை ‘வந்தேபாரத்’ அதிவிரைவு ரயிலில் ஏறி பார்வையிட்டார். அங்கு முதல் பயணத்துக்காக காத்திருந்த பள்ளி மாணவர்கள் சிலரிடம், ரயில் பயணம் குறித்தும், படிப்புகுறித்தும் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது, ஆளுநர், முதல்வர், ரயில்வே அமைச்சர் உடன் இருந்தனர்.

பின்னர், 10-வது நடைமேடையில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்த பிரதமர் மோடி, பச்சைக் கொடியை அசைத்து ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயிலை தொடங்கி வைத்தார். ரயிலில்பயணித்தவர்களுக்கு கையசைத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு, விவேகானந்தர் இல்லத்தில் நடந்த ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

தமிழகம்

16 mins ago

இந்தியா

30 mins ago

விளையாட்டு

34 mins ago

தமிழகம்

46 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்