சென்னை: ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டதையொட்டி, நேற்று தமிழகம் வந்த பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும்தொண்டர்கள் கலந்து கொண் டனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீ ஸார் கைது செய்தனர்.
முன்னதாக தலைவர்கள் பேசியதாவது:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: காங்கிரஸ் அரசியல் ரீதியாக தவறிழைக்காத கட்சி. ஜனநாயகத்தை தரம் தாழ்த்தி ராகுல் காந்தியால் பேச முடியாது. ஏனென்றால் நாட்டின் ஜனநாயகம் காங்கிரஸால் உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதனை சேதமடைய விடமாட்டோம் என்பதே காங்கிரஸ் நிலைப்பாடு. நமது லட்சியத்தை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு செயல்படுகிறது. மதவாத எதிர்ப்பு என்ற நேர்கோட்டில் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளோம். ஆனால் அரசும், காவல்துறையும் வெவ்வேறு நிலைப்பாட்டில் உள்ளன. காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன்குமாரை காவல்துறையினர் வீட்டில் சிறை வைத்துள்ளனர். காவல்துறையின் நடவடிக்கை வருத்தமளிக்கிறது.
சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை: நாட்டில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக ராகுல் காந்தியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பிரதமர் திணறுகிறார். ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு கருணை காட்டியவர்களுக்கு ராகுல் மீது ஏன் கருணை இல்லை.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு: சுதந்திர இந்திய வரலாற்றில் நாடாளுமன்றத்தை மத்திய அரசு முடக்கிய செயல் நடந்ததில்லை.
ஜோதிமணி எம்.பி.: நாட்டின் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டிய பிரதமர் நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடியும்போதே அவைக்கு வருகிறார். நாடாளுமன்ற பதவி போய் ஒரு ஆண்டு காலமான குலாம் நபி ஆசாத்துக்கு வீட்டைகாலி செய்ய நோட்டீஸ் அனுப்பலாமே. அவ்வாறு செய்யாமல் தகுதி இழப்பு செய்யப்பட்ட உடனே ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், எம்எல்ஏக்கள் அசன் மவுலானா, துரை சந்திரசேகர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத்,தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர்கள் பொன் கிருஷ்ணமூர்த்தி, கோபண்ணா, தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ரஞ்சன் குமாருக்கு வீட்டு சிறை: காங்கிரஸ் எஸ்சி பிரிவு மாநில தலைவர் ரஞ்சன் குமார், நேற்று கருப்பு பலூன்களை பறக்க விட இருந்ததாக போலீஸாருக்கு நேற்றுமுன்தினம் இரவு தகவல் கிடைத்தது.இதையடுத்து மதுரவாயல் நூம்பல்பகுதியில் வசிக்கும் ரஞ்சன் குமார் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தி, கருப்பு பலூன்களை பறிமுதல் செய்தனர். மேலும், ரஞ்சன் குமாரை வீட்டுச் சிறையில் வைத்து போலீஸார் கண்காணித்தனர்.