அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம் 
தமிழகம்

தமிழகத்தில் புதிய மாவட்டங்களை உருவாக்க அன்புமணி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை:

திருவள்ளூர், சேலம், மதுரை, திருச்சி, கடலூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், கும்பகோணம், திருப்பூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக மக்கள் தொகை உள்ளது. பெரிய மாவட்டத்தை ஒரு ஆட்சியர் நிர்வகிப்பதும், வளர்ச்சித் திட்டங்களை திறம்படச் செயல்படுத்துவதும் சாத்தியமல்ல.

ஏறத்தாழ 27 லட்சம் மக்களின் தேவைகளை நிச்சயமாக ஓர் அதிகாரியால் நிறைவேற்ற முடியாது. சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, கும்பகோணம் மாவட்டம் அமைக்கப்படும் என்றுமுதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் போது, மாவட்ட நிர்வாகம் மேம்படும். உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

எனவே, தமிழகத்தில் மக்கள்தொகை அதிகமுள்ள மாவட்டங்களைப் பிரித்து, 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை நடைபெற்று வரும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலே வெளியிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நீட் பயிற்சி மையங்கள்: இதேபோல, அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில். ‘கடலூர் மாவட்டம் நெய்வேலி மாணவி நிஷா தற்கொலை செய்து கொண்டதற்கு, தனியார்நீட் பயிற்சி நிறுவனம் ஏற்படுத்திய மனஉளைச்சல்தான் என்று தெரியவந்துள்ளது. நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேரும் மாணவ, மாணவிகளில், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி,சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும்.

அதற்காகத் தான் பயிற்சி மையங்கள் லட்சக் கணக்கில் கட்டணம் வசூலிக்கின்றன. எனவே,மாணவி நிஷாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனிப் பயிற்சி மையங்களை ஒழுங்கு படுத்துவதற்கான விதிகளை வகுத்து, செயல்படுத்த வேண்டும். மேலும், நீட் விலக்கு சட்டத்துக்கு, நடப்பாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு முன்பாக தமிழக அரசு ஒப்புதல் பெற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT