போடி: சென்னைக்கு நேரடி ரயில் வசதி இல்லாததால், தேனி மாவட்டத்தில் ஆம்னி பேருந்துகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. பேருந்துகளில் கூடுதல் கட்டணம் மற்றும் முதியவர்கள், நோயாளிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன.
கேரளாவின் நுழைவுவாயிலாக தேனி மாவட்டம் அமைந்துள்ளது. தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற கேரளா மற்றும் தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஏலக்காய் விளைச்சலில் போடி மற்றும் இடுக்கி மாவட்டம் தேசிய அளவில் பிரதான பங்கு வகித்து வருகிறது.
வெளி மாநிலங்களுக்கு மா, இலவம், திராட்சை உள்ளிட்ட வர்த்தகமும் அதிகளவில் நடைபெறுகிறது. மேலும் குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான், வீரபாண்டி கவுமாரியம்மன் உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கும், மேகமலை, தேக்கடி, மூணாறுக்கும் வெளிமாநிலங்களில் இருந்து அதிகமானோர் வந்து செல்கின்றனர்.
இவ்வாறு ஆன்மிகம், சுற்றுலா மற்றும் வர்த்தகம் என்று வளர்ச்சி அடைந்துள்ள தேனி மாவட்டத்தில் அதற்கேற்ப ரயில் போக்குவரத்து வசதி இல்லை என்பது நீண்டகாலமாக பெரும் குறைபாடாக உள்ளது. இல்லை. சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு ரயிலில் செல்ல வேண்டுமானால், மதுரைக்கோ அல்லது திண்டுக்கல்லுக்கோ பேருந்தில் பயணித்து பிறகு ரயிலில் செல்ல வேண்டி உள்ளது.
இல்லாவிட்டால், தொலைதூர பயணங்களுக்கு ஆம்னி பேருந்துகளையே தேனி மாவட்ட மக்கள் சார்ந்துள்ளனர். இதனால் பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. முன்பெல்லாம் தேனி, போடி, கம்பம், பெரியகுளம், சின்னமனூர் ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டன.
தற்போது ஓடைப்பட்டி, காமாட்சிபுரம், தேவாரம், கண்டமனூர், வருசநாடு உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஆம்னி பேருந்துகள் சென்னைக்கு இயக்கப்படுகின்றன. மேலும் திராட்சை, மா உள்ளிட்ட பல்வேறு விளைபொருட்களையும் பேருந்தின் மேல்தளத்தில் ஏற்றி கொண்டு செல்கின்றனர்.
பேருந்து கட்டணம் அதிகம்: இப்பேருந்துகளில் பயணக் கட்டணம் ரயிலை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். நீண்ட தூரம் பேருந்துகளில் பயணிப்பதால் முதியவர்களுக்கு உடல் உபாதையை ஏற்படுத்துகிறது. அகல ரயில் பாதைக்காக சுமார் ரூ.500 கோடி செலவு செய்தும் போடிக்கு ரயில் இயக்காமல் இருப்பது பொதுமக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
இது குறித்து போடி பகுதி மக்கள் கூறுகையில், பல ஆம்னி பேருந்துகள் அரசியல்வாதிகளின் பினாமி பெயர்களில் இயங்கி வருகின்றன. ரயிலை இயக்கினால் வருவாய் பாதிக்கும் என்பதால் அறிவித்த ரயிலைக் கூட இயங்கவிடாமல் தாமதித்து வருகின்றனர் என்றனர்.
ரயில்வே ஆலோ சனைக்குழு உறுப்பினர் கேஎஸ்கே.நடேசன் கூறுகையில், போடிக்கு ரயில் இயக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இதுவரை உரிய பதில் இல்லை. இதனால் தொலைதூரப் பயணங்களுக்கு ஆம்னி பேருந்துகளையே நம்பி இருக்கின்றனர். பொது மக்களின் நிலையை உணர்ந்து, முதற்கட்டமாக அறிவித்த ரயில்களையாவது இயக்க வேண்டும், என்றார்.