திறப்பு விழாவுக்குத் தயாரான மதுரை - ஊமச்சிகுளம் இடை யிலான மேம்பாலத் தூண்களில் வரையப்ப ட்டுள்ள ஓவியங்கள்.படங்கள்: நா.தங்கரத்தினம் 
தமிழகம்

சென்னையிலிருந்து காணொலி வாயிலாக மதுரை - நத்தம் மேம்பாலத்தை பிரதமர் ஏப்.8-ல் திறக்கிறார்?

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை-நத்தம் மேம்பாலத்தை வரும் ஏப்.8-ம் தேதி பிரதமர் காணொலி வாயிலாக திறக்க வாய்ப்புள்ளதால், தயார் நிலையில் இருக்குமாறு உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மதுரை-நத்தம் இடையே 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாகவும், மதுரையிலிருந்து சென்னை, திண்டுக்கல்லுக்கு விரைந்து செல்லவசதியாக இச்சாலை உருவாக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக,மதுரை தல்லாகுளத்திலிருந்து ஊமச்சிகுளம் வரையில் 7.3 கிமீ மேம்பாலமாக அமைக்கப்பட்டுள்ளது.

நாராயணபுரம், திருப்பாலை என 2 இடங்களில் மேம்பாலத்தில் ஏறவும், இறங்கவும் இணைப்புப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள மிக நீண்ட மேம்பாலத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் பாரத் மாலா திட்டத்தின் கீழ் கட்டியுள்ளது.நத்தம் வரையில் 35 கி.மீ. சாலைரூ.1028 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. 2 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய பணிகள் கரோனா காரணமாக மூன்றரை ஆண்டுகளாகிவிட்டன.

மதுரை நகருக்குள் மேம்பாலத்துக்கு மட்டும் ரூ.600 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது. பிரதான கட்டுமானப்பணிகள் அனைத்தும் 2 மாதங்களுக்கு முன்னரே முடிந்துவிட்டன. தூண்களை அழகுபடுத்துதல், நடைமேடை அமைத்தல், மழைநீரைக் கடத்தும் வாய்க்கால் அமைத்தல் உள்ளிட்ட எஞ்சிய பணி்கள் மட்டுமே நடந்து வருகின்றன. மின் விளக்குகளை ஒளிரவிட்டும், வாகனங்களை இயக்கியும் இறுதிக்கட்ட சோதனை நடந்து வருகிறது.

இப்பாலம் செயல்பாட்டுக்கு வரும்போது மதுரையின் வடபகுதி விரைவான வளர்ச்சியைப் பெறும். தற்போதே சத்திரப்பட்டி வரை ஏராளமான குடியிருப்புகள், கட்டுமானங்கள் நடந்து வருகின்றன. ஊமச்சிகுளம் வரையில் பல வணிக நிறுவனங்கள் தினந்தோறும் திறக்கப்படுகின்றன.

நத்தம் சாலையுடன் வாடிப்பட்டி-கொடிக்குளம் 4 வழிச்சாலை இணைவதால், இந்தச் சாலைகள் பயன்பாட்டுக்கு வரும்போது எளிதான, விரைவான போக்குவரத்து வசதி கிடைக்கும். வாடிப்பட்டி, திண்டுக்கல், நத்தம், திருச்சி, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், அருப்புக்கோட்டை என அனைத்து முக்கிய ஊர்களுக்கும் செல்வதற்கான 4 வழிச்சாலை இணைப்பும் கிடைத்துவிடும். இதனால் மதுரைக்குள் வராமலேயே பல முக்கிய ஊர்களுக்குச் செல்ல முடியும். இதனால், நத்தம் மேம்பாலம் எப்போது திறக்கப்படும் என்ற அதிக எதிர்ப்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகை யில், ‘ஏப்.8-ம் தேதி சென்னைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார். அப்போதே நத்தம் மேம்பாலத்தை திறக்க ஏற்பாடு செய்யலாமா என உயர் அலுவலர்கள் கேட்டுள்ளனர். விவரத்தை அளித்துள்ளோம். அன்றே திறக்கும் வாய்ப்பு உள்ளதால் அதற்குத் தயாராக இருக்கும்படி தெரிவித்துள்ளனர். இதற்கேற்ப பணிகள் நடந்து வருகின்றன’என்றார்.

SCROLL FOR NEXT