தமிழகம்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு இன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம்: ஊரக வளர்ச்சித்துறை செயலர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராமசபை கூட்டம் நடைபெறும் என்று ஊரக வளர்ச்சித் துறை செயலர் பெ.அமுதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கிராம சபைகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 4-லிருந்து 6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதன்முறையாக, உலக தண்ணீர் தினமான மார்ச் 22-ம் தேதி (இன்று) கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. ஜல்சக்தி இயக்கத்தின் மூலம்தெரிவிக்கப்பட்டுள்ள கருப்பொருள், ‘குடிநீருக்கான ஆதாரத்தை நிலைப்படுத்துதல்” ஆகும்.

உலக தண்ணீர் தினத்தில் நடைபெறும் கிராம சபையில் ஒவ்வொருவரும் நீரை பாதுகாத்தல், பயன்பாட்டை குறைத்தல் மற்றும் அனைத்து வீடுகளிலும் மழைநீரை சேகரித்தல் என்ற விழிப்புணர்வுடன் கலந்து கொள்ள வேண்டும்.

மேலும், புதிய குடிநீர் ஆதாரங்களை உருவாக்குதல், பாரம்பரியநீர்நிலைகளை புனரமைத்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் ஆகியவற்றுக்கு ஏதுவாக அனைத்து நீர்நிலைகளையும் கணக்கெடுத்து அதற்கான திட்டங்களை தீட்டுதல், சமூக காடுகள் வளர்த்தல் மற்றும் பல்வேறு திட்ட செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் கிராம சபையில் நடைபெற வேண்டும். 2023-ம்ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அதுகுறித்த பொருளும் விவாதிக்கப்பட உள்ளது.

அனைத்து ஊராட்சிகளிலும், கிராம சபை நடைபெறுவதை மாவட்ட அளவில், மாநில அளவில் கண்காணிக்க ‘நம்ம கிராமசபை’ எனும் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம்முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள் உள்ளிட்டவை இந்த கைபேசி மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT