தமிழகம்

உதகையில் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் - சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 16 பேர் கைது

ஆர்.டி.சிவசங்கர்

உதகை: ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ, சிபிஎம், விசிக கட்சிகளைச் சேர்ந்த 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தடை சட்ட மாசோதாவிற்கு ஒப்புதல் வழங்காத ஆளுநர், சில விளக்கங்கள் கேட்டு கடந்த நவம்பர் 24ம் தேதி அரசுக்கு கடிதம் அனுப்பினார். அரசு சார்பில் 24 மணி நேரத்தில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்பின் சட்ட அமைச்சர் ரகுபதி மற்றும் அதிகாரிகள் ஆளுநரை சந்தித்து உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு வலியுறுத்தினர்.

இந்நிலையில், 4 மாதங்களுக்குப் பிறகு கடந்த 8ம் தேதி ஆளுநர், இம்மசோதாவை அரசுக்கே திருப்பி அனுப்பினார். மத்திய அரசின் கீழ் வரும் விவகாரத்தில் மாநில அரசு எந்த அடிப்படையில் சட்டம் இயற்றலாம் என்பது உள்பட 8 கேள்விகளை ஆளுநர் எழுப்பி இருந்தார்.

உதகை ராஜ்பவன் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவி தங்கியுள்ள நிலையில், ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் மசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பியதை கண்டித்து ராஜ்பவன் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது. இதில், சிபிஎம்., சிபிஐ., மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை கலந்து கொண்டன.

போராட்டத்தை முன்னிட்டு ராஜ்பவன் மற்றும் தாவரவியல் பூங்கா வளாகத்தில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஆளுநருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் 16 பேரை போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். இதனிடையே போராட்டம் காரணமாக ஆளுநர் தங்கியுள்ள ராஜ்பவனில் அருகே உள்ள தாவரவியல் பூங்காவில் வரும் 12ம் தேதி வரை நடைப் பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT