சேலம் டவுன் ரயில் நிலையத்தில், ரயில்கள் நிற்கும்போது, அவற்றின் பெட்டிகள் நிற்கும் இடத்தினை அறிய உதவும் பெட்டி எண் பலகையில் எழுத்துகள் அழிந்து, தெளிவின்றி காணப்படுகிறது. (அடுத்த படம்) செயல்படாத குடிநீர் குழாய். படங்கள்: எஸ்.குரு பிரசாத் 
தமிழகம்

சேலம் | மக்களால் அதிகளவில் பயன்படுத்தப்படும் சேலம் டவுன் ரயில் நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த கோரிக்கை

செய்திப்பிரிவு

சேலம்: சேலம் மாவட்ட மக்களால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் சேலம் டவுன் ரயில் நிலையத்தில், ரயில் பெட்டிகளை அறிவதற்கான பலகை, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று பயணிகளும் பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.

சேலம் மாநகரின் மையத்தில் குடியிருப்புகளுக்கு அருகே சேலம் டவுன் ரயில் நிலையம் அமைந்துள்ளது. சேலத்தில் இருந்து புறப்பட்டு சென்னை செல்லக்கூடிய ஒரே விரைவு ரயில், சேலம் டவுன் ரயில் நிலையம் வழியாக சென்று வருவதால், டவுன் ரயில் நிலையம் பொதுமக்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

மேலும், சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகள் மற்றும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், நாகை மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய மங்களூரு- புதுச்சேரி விரைவு ரயில், பெங்களூரு- காரைக்கால் மற்றும் சேலம்- விருத்தாசலம் உள்ளிட்ட பயணிகள் ரயில்களும் சேலம் டவுன் ரயில் நிலையம் வழியாக சென்று வருகின்றன.

இதனால், சேலம் மாநகர மக்கள் மட்டுமல்லாது, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் சேலம் மாநகருக்கு வந்து செல்வதற்கு வசதியாக, சேலம் டவுன் ரயில் நிலையம் இருந்து வருகிறது.

தினமும் பயணிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வரும் சேலம் டவுன் ரயில் நிலையத்தில், அடிப்படை வசதிகள் முறையாக இல்லை என்று பயணிகளும் , பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியது: சேலம் டவுன் ரயில் நிலையத்தின் நடைமேடைகளில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் பல பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. சேலம் டவுன் ரயில் நிலையம் உள்பட சேலம் - விருத்தாசலம் வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்கள் பலவற்றிலும் உள்ள கழிவறைகள் பூட்டியே வைக்கப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் இயற்கை உபாதைக்காக, வெளியே செல்ல வேண்டிய அவலம் உள்ளது.

சேலம் டவுன் ரயில் நிலையத்தில், ரயில் பெட்டிகள் நிற்கும் இடம், சிறிய பேனர்களில் எழுதி, மின் விளக்கு கம்பத்தில் மாட்டி வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில் உள்ள எழுத்துகள் அழிந்துவிட்டன.

இதனால், இரவு நேரத்தில், ரயிலில் தாங்கள் ஏற வேண்டிய பெட்டி நிற்கும் இடம் தெரியாமல் அவதிப்பட வேண்டியதாகிறது. மேலும், 2-வது நடைமேடையில் ரயில் பெட்டி நிற்கும் இடத்தை அறிவிக்க, எந்த வசதியும் செய்யப்படவில்லை.

டவுன் ரயில் நிலையத்தில், நுழைவு வாயிலில் செயல்பட்டு வந்த டிக்கெட் கவுன்ட்டர் மூடப்பட்டு, முன்பதிவு டிக்கெட்டுகள் வழங்கும் இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள், டிக்கெட் வழங்கும் இடம் தெரியாமல், ரயிலை தவறவிட்டு வருகின்றனர்.

மேலும், நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனாலும், பயணிகள் டிக்கெட் பெற முடியாத நிலை உள்ளது. சேலம் மாவட்ட மக்களால் அதிகளவில் பயன்படுத்தப்படும் சேலம் டவுன் ரயில் நிலையத்தில், பயணிகளுக்கான இருக்கைகள், நிழற்குடை ஆகியவற்றை கூடுதலாக அமைக்கவும், அடிப்படை வசதி குறைபாடுகளை சீரமைக்கவும் சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

SCROLL FOR NEXT