சென்னை: சேப்பாக்கம் பெல்ஸ் சாலை சென்னை நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள உயர்தர அறிவுத்திறன் வகுப்பறையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி நேற்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ்,இந்த சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 7 சென்னை பள்ளிகளில் உள்ள28 வகுப்பறைகளில் தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் உயர்தர அறிவுத்திறன் வகுப்பறைகள் (Smart Class) அமைக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு 114-க்கு உட்பட்ட சேப்பாக்கம் பெல்ஸ் சாலை சென்னை நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட உயர்தர அறிவுத்திறன் வகுப்பறையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இந்த வகுப்பறையில் நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள திரைப் பலகையின் (Smart Digital Board) மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும். நவீன தொழில் நுட்பத்துடன் திரையின் மூலமாக பாடங்கள் கற்கும்போது மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு அடையும்.
இந்த வகுப்பறையில் அமைக்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்திலான திரைப்பலகையின் மூலம் கற்பித்தல் செயல்பாடுகளை அமைச்சர் பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.