நெரிசலால் முடங்கும் மதுரை அரசு மருத்துவமனை பனகல் சாலை: மாநகராட்சி, காவல் துறை வேடிக்கை பார்க்கலாமா?

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: தென் மாவட்டங்களின் முக்கிய மருத்துவமனையாகத் திகழும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை செல்லும் சாலை ஆக்கிரமிப்புகளால் நோயாளிகளை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்கள் மற்றும் பொதுமக்கள் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சிரமப்படுவது அன்றாட நிகழ்வாகி வருகிறது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக மருத்துவக் கட்டமைப்பு வசதிகள், மருத்துவ நிபுணர்கள் உள்ளதால் கன்னியாகுமரி முதல் திண்டுக்கல் வரை 8 மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் உயர் சிகிச்சைகளுக்காக பரிந்துரைக்கப்படுகின்றனர்.

அண்டை மாவட்ட நான்கு வழிச் சாலைகள், நெடுஞ்சாலைகள், மாவட்ட சாலைகளில் நடக்கும் விபத்துகளில் காயமடைவோர், ஆம்புலன்ஸ்களில் மதுரை அரசு மருத்துவமனைக்குத்தான் கொண்டு வரப்படுகின்றனர். நாளொன்றுக்கு 15 ஆயிரம் வெளி நோயாளிகள், 3 ஆயிரம் உள் நோயாளிகள் இங்கு சிகிச்சை பெறுகின்றனர்.

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உட்பட 1,500-க்கும் மேற்பட்டோர் ஷிப்ட் முறையில் பணிபுரிகிறார்கள். மேலும், பார்வையாளர்கள், நோயாளிகளுடன் உடன் வருவோரையும் சேர்த்தால் நாளொன்றுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். ஆனால், மருத்துவமனையில் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதி இல்லை.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தலைக்காயம், எலும்பு முறிவு அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு மட்டும் வாகனங்கள் நிறுத்தும் பாதாள அறை வசதி உள்ளது. அதுவும் போதுமானதாக இல்லை. பிரதானக் கட்டிடமான பழைய மருத்துவமனை வளாகத்தில் வாகன நிறுத்துமிட வசதியே இல்லை.

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களே வாகனங்களை நிறுத்த இடமின்றி அவர்களை குடும்ப உறுப்பினர்கள் தினமும் வாகனங்களில் வந்து பணிக்கு இறக்கி விட்டுச் செல்லும் நிலை உள்ளது. பழைய மருத்துவமனைக் கட்டிடத்தில்தான் வெளிநோயாளிகள் பிரிவும், முக்கிய அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் உள்ளன.

சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்களுடைய வாகனங்களை மருத்துவமனை காவலர்கள், நுழைவு வாயிலிலேயே நிறுத்தி திருப்பி அனுப்பி விடுகின்றனர். அதனால், இவர்கள், மருத்துவமனை முன் பனகல் சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்திவிட்டு மருத்துவமனைக்குள் செல்கிறார்கள்.

மருத்துவமனைக்குள் வாகனங்கள் நிறுத்தும் வசதி இல்லாததால் மருத்துவமனை காவல் நிலைய போலீஸாரும், மாநகர போக்குவரத்து போலீஸாரும் மருத்துவமனை முன் சாலையை ஆக்கிரமித்து நிறுத்துவோரைக் கண்டு கொள்வதில்லை. பனகல் சாலை, கோரிப்பாளையம் முதல் ஆட்சியர் அலுவலகச் சந்திப்பு வரை மாநகராட்சி சாலையாக உள்ளது.

அதனால், இந்தச் சாலையில் மருத்துவமனை முன் நிறுத்தும் வாகனங்களுக்கு மாநகராட்சி ஒப்பந்ததாரர் எனக் கூறிக் கொள்வோர் ரசீது போட்டு ஒவ்வொரு வாகனத்துக்கும் ரூ.8 கட்டணம் வசூலிக்கின்றனர். அதனால், தாறுமாறாக வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். மருத்துவமனை எதிரே பேருந்து நிறுத்தம் உள்ளது.

இந்த நிறுத்தம் முன் வாகனங்களை வரிசையாக சாலையில் `பார்க்கிங்' செய்கிறார்கள். அதனால், நிறுத்தத்தில் நோயாளிகள் பேருந்துக்காக காத்திருக்க முடியவில்லை. வாகனங்களைத் தாண்டிச்சென்று நிழற்குடை இருக்கையிலும் பயணிகள் அமர முடியவில்லை. இந்த பனகல் சாலை, மதுரை மாநகரில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

அரசு ராஜாஜி மருத்துவமனை மட்டு மின்றி பல தனியார் மருத்துவமனைகள், ஆட்சியர் அலுவலகம், பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் இந்தச் சாலையில் உள்ளன. மாநகர காவல்துறையும், மாநகராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளாததால் மருத்துவமனை அமைந்துள்ள இந்த பனகல் சாலையை கடந்து நோயாளிகள், பொதுமக்கள் வாகனங்களில் செல்லவே முடியவில்லை.

ஆம்புலன்ஸ்களில் வரும் உயிருக்குப் போராடுவோரை இந்தச் சாலையை கடந்து மருத்துவமனைக்கு துரிதமாகக் கொண்டுசெல்ல முடியவில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் பனகல் சாலை போக்குவரத்து நெரிசலைக் கடந்து சரியான நேரத்துக்குப் பணிக்குச் செல்ல முடியவில்லை.

அதனால், நோயாளிகளுக்கு தடையில்லா சிகிச்சை வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆட்டோக்கள், இந்தப் போக்குவரத்து நெரிசலிலும் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதில் குறியாக இருந்து செயற்கையாக நெரிசலை ஏற்படுத்துகின்றன. அதனால், 80 அடி சாலையான பனகல் சாலை, மருத்துவமனை முன் 40 அடியாக சுருங்கி `பீக் அவர்ஸ்' மட்டுமின்றி நாள் முழுவதுமே நெரிசலில் திணறுகிறது.

இதுகுறித்து மாநகர கூடுதல் துணை ஆணையர் திருமலைக்குமார் கூறுகையில், ‘‘மருத்துவமனை வளாகத்தில் வாகனங்களை நிறுத்த வசதி இல்லாததுதான் பிரச்சினைக்குக் காரணம். அதனால், அவசர சிகிச்சைக்கு வருவோரை, மருத்துவமனை எதிரே `பார்க்கிங்' செய்யாதீர்எனத் தடுக்க முடியாது.

அதே நேரத்தில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்துவோருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கிறோம். மருத்துவமனையில் நெரிசல் ஏற்படாமல் மருத்துவமனைக்கு வருவோரும் பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிறோம்,’ என்றார். மேயர் இந்திராணி கூறுகையில், ‘மாநகராட்சி 100 சதவீதம் ஆக்கிர மிப்புகள் மீது நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக உள்ளது.

மருத்துவமனை முன் உள்ள பார்க்கிங் பிரச்சினைக்கு தீர்வுகாண காவல்துறை, மருத்துவமனை நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படத் தயாராக உள்ளோம். அதுவரை காவல் துறை தரப்பில் மருத்துவமனை முன் போலீஸாரை நிறுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.

டீன் ரத்தினவேலு கூறும்போது, ‘மருத்துவமனை வளாகத்தில் இடமே இல்லை. பனகல் சாலையில் உள்ள நடைபாதையைச் சீரமைத்து அதில் மருத்துவமனைக்கு வருவோரை பார்க்கிங் செய்ய வைத்தால் குறைந்த பட்சம் சாலையில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க முடியும். இந்த நடவடிக்கையை மாநகராட்சிதான் முன்னெடுக்க வேண்டும். தொலை நோக்குப் பார்வையில் பார்த்தால் 50 சதவீத மருத்துவமனைக் கட்டிடங்களை புறநகருக்குத்தான் கொண்டு செல்ல வேண்டும்,’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்