பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் என்னென்ன? - முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: குஜராத் வன்முறை குறித்த ‘பிபிசி’-யின் ஆவணப் படம், அதானி குழும விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுகவைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம், மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலிமாறன் வளாகத்தில் நடைபெற்றது. இதில், விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள ஒன்றிய அரசின் 2023-24 நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர்பாகவும் குடியரசுத் தலைவர் உரை குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தொடரின்போது திமுக சார்பில் அவையில் வைக்கப்பட வேண்டிய முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்தும், அகில இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள குஜராத் வன்முறை குறித்த ‘பிபிசி’-யின் ஆவணப் படம் குறித்தும், இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்தும், இந்திய அரசமைப்பின் அடிப்படை பண்புகளை மாற்றி அமைக்கும் முயற்சியாக குடியரசு துணைத் தலைவர் உள்ளிட்ட சிலர் தெரிவிக்கும் தேவையற்ற கருத்துகள் குறித்தும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் உறுதியான வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழ்நாடு அரசால், ஒன்றிய அரசுக்கு எழுதப்பட்டுள்ள கடிதங்களின் நிலை குறித்தும் - முக்கியமாக நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவது; தமிழக மீனவர்கள்மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்துவது, கைது செய்வது, படகுகளை இலங்கை ராணுவம் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்குவது; சிறுபான்மை மாணவர்களுக்கு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை வழங்கி வந்த மெட்ரிக் கல்வி உதவித் தொகையை நிறுத்தியது; மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிப்பது; மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது; சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது;

கால்நடைகளை கோமாரி நோயிலிருந்து தடுக்கும் தடுப்பூசிகளைப் பெறுவது; தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள் மற்றும் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிப்பது; என்.எல்.சி. நிறுவனத்தின் வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது; இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் - அகில இந்திய அளவில் எதிரொலிக்கும் பிரச்சினைகள் குறித்தும் இரு அவைகளிலும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்ப வேண்டுமென அறிவுறுத்துப்பட்டது.'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

36 mins ago

விளையாட்டு

59 mins ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்