சென்னை | குடியரசு தின விழா அணிவகுப்பில் முதலில் வந்த 'தமிழ்நாடு வாழ்க' வாசகம் தாங்கிய வாகனம்

By செய்திப்பிரிவு

சென்னை: 74-வது குடியரசு தினத்தையொட்டி சென்னையில் நடந்த விழாவில், அணிவகுப்பு ஊர்வலத்தில் முதலில் வந்த தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் வடிவமைக்கப்பட்டிருந்த "தமிழ்நாடு வாழ்க" வாகனம் பார்வையாளர்களின் கவனம் பெற்றது.

நாட்டின் 74-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா காமராஜர் சாலையில் சேப்பாக்கம் பகுதியில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சென்னையில் வழக்கமாக, மெரினா காந்தி சிலை பகுதியில் குடியரசு தின விழா நடைபெறும். அப்பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடப்பதால், இந்த முறை உழைப்பாளர் சிலை பகுதியில் விழா நடைபெற்றது.

குடியரசு தினத்தையொட்டி, காலை 8 மணிக்கு முதல்வர் ஸ்டாலினும், அவரைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியும் காவல் துறை மற்றும் ராணுவ அணிவகுப்புடன் விழா நடைபெறும் இடத்துக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு முப்படை தலைமை அதிகாரிகள், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோரை தலைமைச் செயலர் அறிமுகம் செய்து வைத்தனர். இதையடுத்து, தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றிவைத்தார். அப்போது இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.

அணிவகுப்பில் வலம் வந்த தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை வாகனம்

இதன் பிறகு, முப்படையினர், கடலோர காவல் படையினர், காவல், சிறை, வனம், தீயணைப்பு துறையினர், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பும், கடலோர காவல் படை,கடற்படை, விமானப்படையின் அலங்காரஊர்திகளும் வலம் வந்தன.

"தமிழ்நாடு வாழ்க" வாகனம்: இந்த அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு வாழ்க என்று வாசகம் இடம்பெற்றிருந்த வாகனம் முதலில் வந்தது. இதனை பார்வையாளர்கள் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர். இந்த வாகனத்தில் தமிழகம், தமிழ்நாடு சர்ச்சையைத் தொடர்ந்து, பொங்கல் பண்டிகையின்போது வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வண்ணம் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்த தமிழ்நாடு என்ற எழுத்துடன்கூடிய கோலமும் இடம்பெற்றிருந்தது.

முன்னதாக, 2023 ஜனவரி 4ம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகம் என்று அழைப்பது மிக பொருத்தமாக இருக்கும் என்று பேசியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல், நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்ற அவர் ஆளுநர் உரையின்போது தமிழ்நாடு என்று சொல்லை தவிர்த்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த அவர், "வரலாற்று பண்பாட்டுச் சூழலில், தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன். எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ, அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பாடு என்று தெரிவித்துக் கொள்கிறேன்" என்று விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

5 hours ago

ஆன்மிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்