உளவுத் துறை அறிக்கையின்படி செயல்பட்டதாக அரசு வாதம்: ஆர்எஸ்எஸ் மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை சுற்றுச்சுவருடன் கூடிய அரங்கத்திற்குள் நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று, தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதையடுத்து உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், நிபந்தனைகளுக்கு உட்பட்டு பேரணி நடத்திக்கொள்ள உத்தரவிட்டது. ஆனால் பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதால் கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 3 இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களுக்கு போலீஸார் மீண்டும் அனுமதி மறுத்ததால் உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட 6 இடங்களைத் தவிர்த்து மற்ற 41 இடங்களி்ல் சுற்றுச்சுவருடன் கூடிய உள்ளரங்குகள் அல்லது விளையாட்டு மைதானங்களில் அணிவகுப்பு பேரணியை நடத்திக் கொள்ள உத்தரவிட்டார். ஆனால், அதையேற்க மறுத்த ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், அணிவகுப்பு பேரணியை ரத்து செய்தனர். இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது ஆர்எஸ்எஸ் தரப்பில், "நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஏற்கெனவே அணிவகுப்புக்கு அனுமதியளித்த உத்தரவை மாற்றியமைத்து, சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் நடத்த உத்தரவிட்டது தவறு. எனவே, இந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணைகு உகந்ததுதான். பிஎஃப்ஐ அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை காரணம் காட்டி, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என எந்த ஆதாரங்களும் இல்லாமல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே காலக்கட்டத்தில் பிற அமைப்புகள் 500 இடங்களில் போராட்டம் நடத்த அனுமதியளித்தது பாரபட்சமானது.

ஒருபுறம் அமைதி பூங்கா எனக்கூறிவிட்டு, இன்னொருபுறம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை என அனுமதி மறுத்துள்ள சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வாதிடப்பட்டது.

அப்போது தமிழ்நாடு அரசு மற்றும் காவல் துறை தரப்பில், "நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அணிவகுப்பு நடத்தப்பட மாட்டாது என ஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ள நிலையில், இந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை தான். அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அடங்கும். 500 இடங்களில் போராட்டங்களுக்குத்தான் அனுமதியளிக்கப்பட்டதே தவிர அணிவகுப்புக்கு அல்ல. வால்பாறை தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள் ஊர்வலத்திற்குக்கூட அனுமதி வழங்கப்படவில்லை.

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள், பிஎஃப்ஐ அமைப்புக்கு தடைக்கு பின்னரும், ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் பாதுகாப்புக்காக 50 ஆயிரம் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கவே அரசு முயற்சித்தது. உளவுத் துறை அறிக்கை அடிப்படையில்தான் காவல் துறையினர் செயல்பட்டனர். எல்லா மத நம்பிக்கையையும் பாதுகாத்து, தமிழ்நாடு அமைதி பூங்காவாக நீடிக்கவே அரசு விரும்புகிறது. அணிவகுப்புக்கு அனுமதி கோரி முறையாக விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள், தனிப்பட்ட முறையில் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிப்பார்கள்" என்று வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல் முறையீட்டு வழக்குகளை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

19 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

27 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

12 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தொழில்நுட்பம்

10 hours ago

மேலும்