தமிழகம்

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முன்பதிவு முடிந்தது

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள், காளைகள் ஆன்லைன் முன்பதிவு நேற்றுடன் முடிவடைந்தது. முன்பதிவில் காளைகள் எண்ணிக்கை அதிகமானால் குலுக்கல் முறையில் டோக்கன் வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்குப் பின்பு தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும். இதில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்பதை காளை வளர்ப்போர் பலர் கவுரவமாக கருதுகின்றனர்.

அண்மைக் காலமாக அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகள், அரசு உயர் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் என பல்வேறு தரப்பினர் ஜல்லிக்கட்டு காளைகளை ஆர்வமுடன் வளர்த்து வருகின்றனர்.

ஆட்சியர் நடவடிக்கை: இவர்கள், தங்கள் காளைகளை எப்படியாவது இந்த 3 போட்டிகளில் ஏதாவது ஒன்றில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்று முயற்சித்து வருகின்றனர். இதற்கான டோக்கன் பெற பல வழிகளில் தீவிரமாக முயன்று வருகின்றனர். எந்த அரசியல் மற்றும் அதிகார பின்புலமும் இல்லாமல் காளைகளை தயார் செய்யும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், தங்கள் காளைகளை அலங்காநல்லூரில் களமிறக்க முடியாமல் ஆண்டுதோறும் ஏமாற்றம் அடைகின்றனர். இந்த முறை ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், முறைப்படி காளைகளுக்கு டோக்கன் வழங்குவதற்கு ஏற்பாடு செய்து வருகிறார்.

9,699 காளைகள் பதிவு: இதனிடையே காளை களுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்றுடன் முடிந்தது. அவனியாபுரம், பாலமேடு, அலங்கா நல்லூர் ஆகிய 3 ஜல்லிக்கட்டுகளிலும் பங்கேற்க 9,699 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 5,399 மாடுபிடி வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக 700 முதல் 800 காளைகளை மட்டுமே களமிறக்க முடியும். அதற்கேற்ப ஒவ்வொரு சுற்றிலும் மாடுபிடி வீரர்கள் களமிறங்குவர்.

இந்நிலையில் டோக்கன் வழங்க நிர்ணயிக்கப்பட்ட காளை எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையில் காளைகள் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, கணிணி மூலம் குலுக்கல் முறையில் காளைகளுக்கு டோக்கன் வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதனால், ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்க்கும் அதிர்ஷ்டம் யாருக்கு கிடைக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு காளை வளர்ப் போரிடையே ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT